Search This Blog

Monday, 28 May 2012

மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள்

ஒரு மனிதன் மரணத்திற்குப் பின் அவரது அமல்களில் மூன்றைத் தவிர மற்றவை எல்லாம் செயலற்றவை ஆகி விடுகின்றன. அம்மூன்று செயல்கள்:— 
1.சதக்கத்துல் ஜாரியா 2.பலன் தரும் கல்வி 3.பெற்றோருக்காக பிரார்த்திக்கும் நேர்மையான (ஸாலிஹான) பிள்ளைகள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்:முஸ்லிம் 

ஒரு முஸ்லிமின் மரணத்தோடு அவரது செயல்கள் முற்றுப்பெறுகின்றன. நற்செயல்கள் செய்து நன்மையைத் தேடிக்கொள்வதும் இயலாமல் ஆகிவிடுகின்றது. ஆயினும் அவர் உயிரோடு இருந்த காலத்தில் செய்த நற்செயல்களில் சில மரணத்திற்குப் பின்னரும் நிரந்தரமாக என்றென்றும் எந்நோக்கத்துடன் அச்செயல் நிறைவேற்றப்பட்டனவோ அந்நோக்கங்கள் நிறைவேறிக் கொண்டு இருக்கும் காலமெல்லாம் அவர் மரணமடைந்த பின்னரும் நன்மைகள் சேர்ந்து கொண்டிருக்கும். உதாரணமாக பள்ளிவாசல்கள், கல்விக்கூடங்கள், மக்கள் குடிநீர் பெற தோண்டிய கிணறுகள், மருத்துவமனைகள், அநாதை இல்லங்கள், தர்ம ஸ்தாபனங்கள், பலன் தரும் விஞ்ஞான கண்டு பிடிப்புகள் இவையாவும் அத்தகையனவாகும். 

இரண்டாவதாக தான் வாழ்ந்த காலத்தில் மக்களுக்கு பலனளித்து கொண்டிருந்த அவரது மார்க்க கல்வியும் மனிதர்களுக்கு பலனளிக்கும் மற்ற கல்வியும், இறந்தவர் தன் கல்வி அறிவால் போதித்தவைகள் பலனாக நன்மைகள் செய்தவருக்குறிய பலன்கள் குறைவில்லாமல் கிடைப்பதோடு அந்நன்மைகளை செய்ய ஊக்குவித்த கல்வியாளருக்கும் அவரது மரணத்திற்குப் பின்னரும் நன்மைகள் சேர்ந்து கொண்டே இருக்கும். 

மூன்றாவதாக மார்க்க நெறிகளை பேணி ஒழுக்கமுடன் வளர்க்கப்பட்ட மக்கள் ஆற்றுகின்ற நற்செயல்கள் யாவும் மரணமடைந்த பெற்றோர்களுக்கு நன்மைகள் சேர்ப்பவையாகும். இத்தகைய சாலிஹான பிள்ளைகளின் இறைவணக்கம், அவர்களின் பிள்ளைகள் இறை உணர்வோடு நிறைவேற்றும் அனைத்து செயல்களும் பெற்றோர்களுக்கு அவர்களின் மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்ப்பவையாகும். 

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களை அணுகி ‘என்னுடைய தந்தையார் மரண சாசனமும் அறிவிக்காமல் அவருடைய சொத்துக்களை விட்டு விட்டு இறந்து விட்டார். நான் அவருடைய சார்பில் ‘சதக்கா’ (தர்மம்) கொடுத்தால் அவரது பாவச் சுமைகளிலிருந்து அவருக்கு விடுதலை கிடைக்குமா?” என வினவினார். நபி(ஸல்) அவர்கள் ‘ஆம்’ என பதிலளித்தார்கள். (அபூஹுரைரா (ரலி) முஸ்லிம்) 

வேறொரு நபிமொழி கீழ்வருமாறு அறிவிக்கப்படுகிறது: 
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் “என்னுடைய தாயார் மரண சாசனம் அறிவிக்காமல் திடீரென மரணம்  எய்திவிட்டார்கள். இறப்பதற்கு முன் பேச வாய்ப்பிருந்திருக்குமேயானால் அவர்கள் ‘சதக்கா’ செய்வது பற்றி கூறி இருப்பார்கள் என நான் நினைக்கிறேன். அவர்களுடைய சார்பில் நான் சதக்கா செய்தால் அவர்களுக்கு நன்மை கிட்டுமா?” என வினவினார். நபி(ஸல்) அவர்கள் ‘ஆம்’ என்றார்கள். (ஆயிஷா (ரலி) முஸ்லிம் 

மேலே கூறிய நபிமொழி ஒருவர் செய்யும் நற்செயல்கள் தமது வாழ்நாளில் தமக்கு நன்மை பயப்பதுடன், தாம் இறந்த பின்பும் தமக்கு நன்மைகள் கிடைத்துக்கொண்டிருக்கும் என அறிந்து செயல்பட ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது. இறந்தவர்களுக்காக அவர்களது சார்பில் தர்மம் செய்வது கட்டாயக் கடமை அல்லவெனினும் அவர்களது சார்பில் செய்யும் தர்மங்களால் இறந்தவர்களுக்கு நன்மை கிடைக்க வழி செய்வதோடு தானும் நன்மை அடைகிறார். 

இறந்தவர் வாரிசுகளின் மீது சாட்டப்படும் கடமை யாதெனில், இறந்தவர் சொத்தின் மீது ஜகாத் கடமையாகி நிறைவேற்றாமல் இருந்தால் அதனை நிறைவேற்ற வேண்டும். இறந்தவர் உயில் எழுதியிருந்தாலும் இல்லாவிட்டாலும் அவரது கடன்களை அவரது சொத்திலிருந்து அடைத்து விடவேண்டும். இவைகளை நிறைவேற்றுவதற்கு போதுமான அளவு அவரது சொத்துக்களில் மதிப்பு இல்லையெனில் அவைகளை நிறைவேற்றுவது வாரிசுகளுக்கு கடமை இல்லை. இருப்பினும் வாரிசுகள் தாம் ஈட்டிய பொருளிலிருந்து நிறைவேற்றுவார்களாயின் அது மிகச் சிறப்புடைய செயலாகும். 

ஆனால், நம்மில் பெரும்பாலோர் துரதிஷ்டவசமாக இவை போன்ற நபிமொழிகளின் கருத்துக்களை  அறியாமலும், உணராமலும் மார்க்கத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுகின்றனர். இறந்தவர்களுக்கு நன்மை சேர்ப்பதாக எண்ணி 3ம், 7ம், 40ம் நாள் பாத்திஹா, வருடப் பாத்திஹா மற்றும் மெளலிதுகள் ஓதி சடங்குகள் செய்கின்றனர். இச்சடங்குகளால் இறந்தவர்கள் நன்மை அடைவர் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. இவற்றால் பொருள் நேரம் சக்தி விரயமாவதுடன் அல்லாஹ்வின் வெறுப்பிற்கும் ஆளாகி விடுகிறார்கள் என்பதை உணரவேண்டும். 

இத்தகைய சடங்குகள் இறந்தவர்களுக்கு நன்மையாக இருப்பின்  நபி(ஸல்) அவர்களும், அவர்களது தோழர்களும் செய்து காட்டி இருப்பார்கள். அவர்களின் மற்ற நற்செயல்களின் முறையும் ஹதீதுகளில் பதிவு  செய்யப்பட்டிருக்கும். ஆனால் இத்தைகைய சடங்குகள் நிறைவேற்றப்பட்டதாக எவ்வித ஆதாரமும் இல்லை. எனவே இவை நிச்சயமாக தவிர்க்கப்படவேண்டியவை. 

அன்புச் சகோதரர்களே! மேற்கூறிய நபிமொழிகளில் கூறப்பபட்டிருப்பவைகளில் தான், நாம் இறந்தவர்களுக்கு நன்மை செய்ய முடியும். அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகிறான். 

எவன் நேரான வழியில் செல்லுகிறானோ, அவன் தன்னுடைய நன்மைக்காக நேரான வழியில் செல்லுகிறான்; எவன் வழிகேட்டில் செல்லுகின்றானோ, அவன் தனக்கே கேடு செய்து கொண்டான்; ஒருவனுடைய பாவச்சுமையை மற்றெருவன் சுமக்க மாட்டான்; (நம்) தூதரை அனுப்பாத வரையில் (எவரையும்) நாம் வேதனை செய்வதில்லை. (அல்குர்ஆன் 17:15) 

அல்லாஹ் நம் அனைவரையும் நல்வழியில் செலுத்துவானாக! 

“லாயிலாஹ இல்லல்லாஹ்”வின் பொருள்




(கப்று வணங்கிகளுக்காகவும், பாத்தியா மொளலூது என்று இறந்தவர்களுக்காகவும் அவுலியாக்கள், வலியுல்லாக்களுக்கும் ஓதுவதால் நன்மைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று நம்பி இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை அறியாமல் செய்து வரும் மக்களுக்காக ஒரு சிறப்புப் பார்வை)

லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவை வாயால் மட்டும் மொழிந்து விட்டால் போதுமானது என்று நினைத்து அதை செயல் வடிவத்தில் கடை பிடிக்காமல். இறைவனுக்கு இணைவைக்கும் செயலாக தர்ஹாக்களில் சென்று வலியுல்லாக்களிடம் உதவி தேடுவதும். நாம் செய்த நன்மை தீமைகளினால் மட்டுமே சொர்க்கம், நரகம் தீர்மானிக்கப்படும் என்ற இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையையே நம்பாமல். பாத்தியா, மொளலூது ஓதி எல்லாவற்றையும் சரி செய்து விடலாம் என்று நினைத்து செய்தும். இறைவனோ, ரசூல் (ஸல்) அவர்களோ அறிவித்துக் கொடுக்காத ஒன்றை, எந்த வித ஆதாரமும் இல்லாத ஒன்றை கடைபிடித்து இறைவனால் மன்னிக்கப்பட முடியாத குற்றமான இணை வைத்தலில் மூழ்கி கிடக்கும் நம் சமுதாயத்தில் யாரேனும் ஒருவரேனும் இக்கட்டுரையை படித்து திருந்தினார்கள் என்றால். இறைவன் அவர்களுக்கும் எமக்கும் இம்மையிலும், மறுமையிலும் நற்கூலி அளிப்பானாக ஆமீன்.
லாயிலாஹ இல்லல்லாஹ்வின் பொருள் யாதெனில் பூமியிலோ, வானத்திலோ உண்மையாக வணங்கப்படுவதற்க்குத் தகுதியான இறைவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை அவன் தனித்தவன். இணை துணையற்றவன் அவனுக்கு நிகராக எதுவுமில்லை ஏனெனில் பாதிலா(பொய்யா)ன கடவுள்கள் அதிகமுள்ளது என்றாலும். உண்மையாக வணங்கப்படுவதற்கு தகுதியானவன் அல்லாஹ் மாத்திரம்தான். அவன் தனித்தவன். யாதொரு இணை துணையுமற்றவன் என்பதாகும் அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்:
‘இரவைப் பகலிலும் பகலை இரவிலும் நுழைவிக்கும் மாபெரிய ஆற்றலாகிய, அது ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் அவன்தான் உண்மையானவன். மற்றும் நிச்சயமாக அவனையன்றி (வேறு) எதை அவர்கள் பிரார்த்திக்கின்றார்களோ அதுவே பொய்யானதாகும். இன்னும் நிச்சயமாக அல்லாஹ் அவன்தான் மிக உயர்ந்தவன் மிகப்பெரியவன். (திருமறை குர்ஆன் 22:62)
இக்கலிமா (லாயிலாஹ இல்லல்லாஹ்)வின் பொருள் ‘அல்லாஹ்வைத்தவிர வேறு படைக்கக்கூடியவன் யாருமில்லை” என்பது மட்டும் பொருளல்ல. முக்கியப் பொருளாக ஏகத்துவத்தை மிகவும் வலியுறுத்தக் கூடியதாக இருக்கிறது. ஏனெனில் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் எந்தக் குறைஷிக் காஃபிர்களுக்கு மத்தியில் நபியாக அனுப்பப்பட்டாரோ அந்தக் குறைஷிக் காஃபிர்கள் கூட படைக்கக்கூடியவன் நிர்வகிக்கக் கூடியவன் எல்லாமே அல்லாஹ்தான் என ஏற்றுக் கொண்டிருந்தார்கள். என்றாலும் வணக்கங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கு இணை துணையின்றி அவனுக்கு மாத்திரம்தான் இருக்க வேண்டும் என்ற (ஓரிரைக்) கொள்கையை அவர்கள் நிராகரித்து விட்டார்கள். அல்லாஹ் அவர்களைப்பற்றி தனது திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்:
‘(என்ன) இவர் (நம்முடைய வணக்கத்திற்குறிய) தெய்வங்களை (நிராகரித்து விட்டு) ஒரே ஒரு வணக்கத்திற்குறியவனாக ஆக்கிவிட்டாரா ? நிச்சயமாக இது ஓர் ஆச்சர்யமான விஷயம் தான் (என்றும் கூறினர்)” (திருமறை குர்ஆன் 38:5)
இக்கலிமா (லாயிலாஹ இல்லல்லாஹ்) வின் மூலம் அல்லாஹ் அல்லாத எந்தவொன்றை வணங்கினாலும் அது பாதிலா(பொய்யா)க்கிவிடும் என்பதையும், வணக்கம் அல்லாஹ்வுக்கு மாத்திரம் தனித்ததாக இருக்க வேண்டும் என்பதையும் அக்காபிர்கள் விளங்கியிருந்தார்கள். அதனால் அதை அவர்கள் விரும்பவில்லை. எனவேதான் நாயகம் (ஸல்) அவர்கள், வணங்கப்படுவதற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று அவர்கள் சாட்சி கூறி, அக்கலிமாவில் கூறப்படும் உண்மை அம்சங்களை ஏற்று நடக்கும் வரை அவர்களுடன் போர் புரிந்தார்கள் . அதுதான் அல்லாஹ்வை தனித்தவனாக, இணை துணையின்றி வணக்கத்தின் மூலம் அவனை ஒருமைப் படுத்துவதாகும். அதுதான் உண்மையான ஏகத்துவம்.
இக்கலிமா ( மேற் கூறப்பட்ட அதனுடைய சரியான பொருளின் பிரகாரம்) லாயிலாஹ இல்லல்லாஹ்வின் பொருள் அல்லாஹ் இருக்கிறான் அல்லது அல்லாஹ் படைக்க்கூடியவன், புதிதாக ஒன்றை உண்டாக்கும் சக்தி பெற்றவன் என்று மாத்திரம் ஏற்றுக் கொண்டிருக்கிற தற்காலத்தில் உள்ள கப்று வணங்கிகளின் கொள்கைகளை முறியடித்து விடுகின்றது. ஏனெனில் அவர்கள் இவ்வாறு ஒரு விதத்தில் தௌஹீதுர் ருபூபிய்யாவை ஏற்றிருந்தாலும் அவர்கள் அல்லாஹ் அல்லாதவைகளை வணங்குவதிலும் மரணித்தவர்களிடத்தில் உதவி தேடுவதிலும். நேர்ச்சைகளின் மூலம் அவர்களிடத்தில் நெருங்குவதிலும் அவர்களுடைய கப்றுகளைச் சுற்றி வணங்குவதிலும், அவர்களுடைய கப்றின் மண்கள் மூலம் பரக்கத் தேடுவதிலும் ஈடுபட்டிருக்கின்றனர்.
‘லாயிலாஹ இல்லல்லாஹ்” என்ற கலிமா அல்லாஹ் அல்லாத அனைத்தையும் வணங்குவதை விட்டு விடுவதையும் வணக்கத்தை அல்லாஹ்வுக்கு மாத்திரம் ஒருமைப்படுத்தி வணங்க வேண்டும் என்பதையும் அறவிக்கின்றது என்பதை இதற்கு முதல் குறைஷிக் காபிர்கள் நன்றாக அறிந்திருந்தனர். அதனால் அவர்கள் இதை மொழியவில்லை. அவர்கள் இக்கலிமாவை மொழிந்திருந்தால் அல்லாஹ்வுக்கு இணை வைத்திருக்க மாட்டார்கள் . ஏனெனில் இதன் பொருள் நன்றாகத் தெரியும். ஆனால் தற்காலத்தில் உள்ள கப்று வணங்கிகள் லாயிலாஹ இல்லல்லாஹ் எனும் கலிமாவை மொழிந்து அதன் பொருளை சரியாக அறிந்திருந்தும், மரணித்துவிட்ட அல்லாஹ்வின் நேசர்கள், ஸாலிஹீன்கள், அவ்லியாக்கள், வலியுல்லாக்கள் ஆகியோரிடம் பிரார்த்திப்பது கொண்டு இக்கலிமாவை முறித்து விடுகின்றனர்.
லாயிலாஹ இல்லல்லாஹ்வின் பொருள், அல்லாஹ் அல்லாத அனைத்தயும் வணங்குவதை விட்டு விட்டு, வணக்கத்தை அல்லாஹ்வுக்கு மாத்திரம் ஒருமைப்படுத்தி வணங்குவதைத்தான் அறிவிக்கின்றது என்று ஏராளமான ஹதீஸ்கள் வந்துள்ளன. இதுதான் நேர்வழி. அல்லாஹ் தூதர்களை எந்த உண்மையான மார்க்கத்தைக் கொண்டு அனுப்பி வைத்தானோ, மேலும் எந்த உண்மையைக் கொண்டு அவனுடைய வேதங்களில் இறக்கி வைத்தானோ அந்த உண்மையான மார்க்கமும் இதுதான். ஒரு மனிதன் லாயிலாஹ இல்லல்லாஹ் எனும் கலிமாவின் சரியான பொருளை அறியாமலும் மேலும் அக்கலிமா எதைக் கூறுகின்றதோ அதனடிப்படையில் அமல் செய்யாமலும் இதனை மொழிவது, அல்லது ஏகத்துவத்தைப் பற்றித் தெரியாமல் அல்லாஹ் அல்லாதவைகளுக்கு வணக்கத்தைச் செலுத்திக் கொண்டு, தன்னை ஒரு ஏகத்துவவாதி என வாதிடுவது ஏகத்துவத்தை அப்படியே முறித்து விடுகின்றது. இந்நிலையில் அவன் அல்லாஹ்வுக்கு இணை வைத்தவன் ஆகி விடுகின்றான்.
ஏகத்துவக் கலிமாவின் சிறப்புகள்
லாயிலாஹ இல்லல்லாஹ் எனும் ஏகத்துவக் கலிமாவை ஒருவன் நாவால் மொழிவதால் மாத்திரம் இதன் சிறப்புகளால் பிரயோஜனம் அடையமாட்டான். யார் இக்கலிமாவை மொழிந்து சரியான முறையில் விசுவாசம் கொண்டு இக்கலிமா கூறும் முறைப்படி அமலும் செய்கின்றாரோ அவருக்கே தவிர வேறு யாருக்கும் இது உண்மையான பிரயோஜனத்தை அளிக்காது. இக்கலிமாவின் மிகச் சிறந்த சிறப்புகளில் ஒன்று யாதெனில் அல்லாஹ்வின் திருப்தியை நாடி யார் இக்கலிமாவை மொழிகின்றாரோ அவருக்கு அல்லாஹ் நரகத்தை ஹராமாக்கி விடுகின்றான்.
உத்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் லாயிலாஹ இல்லல்லாஹ் எனும் கலிமாவை அதன் மூலம் அல்லாஹ்வின் திருப்தியை நாடி யார் மொழிகின்றார்களோ அல்லாஹ் அவர்களுக்கு நரகத்தை ஹராமாக்கி விடுகின்றான். (ஆதாரம் புகாரி,முஸ்லிம்)
ஏகத்துவக் கலிமாவின் கடமைகள்
ஷஹாதாஹ்(ஏகத்துவக்)கலிமாவிற்கு இரண்டு கடமைகள் உண்டு அவை.
1. ‘லாயிலாஹ” எனும் இச் சொல்லில் வணங்கப்படுவதற்கு தகுதியானவன் யாருமில்லை என்று மறுத்துரைப்பது.
2. ‘இல்லல்லாஹ்” எனும் இச்சொல்லில் அல்லாஹ்வைத் தவிர என்று தனிப்படுத்துவது.
அல்லாஹ்வுக்கன்றி வேறு யாருக்கும் அல்லது வேறு எதற்கும் தெய்வீகத்தன்மை கிடையாது என்பதை ‘லாயிலாஹ” எனும் வாசகமும் அல்லாஹ்வை மாத்திரமே விசுவாசித்து அவனுக்கு மாத்திரமே வணக்க வழிபாடுகளை செய்ய வேண்டும் என்பதையும் ‘இல்லல்லாஹ்” எனும் வாசகமும் தெளிவுபடுத்துகின்றது.
லாலிலாஹ இல்லல்லாஹ் எனும் கலிமாவின் நிபந்தனைகள்
ஏகத்துவக்கலிமாவிற்கு ஏழு நிபந்தனைகளை உலமாக்கள் கூறியுள்ளனர். அந்த ஏழு நிபந்தனைகளும் அதில் ஒன்ற சேர்ந்து அவற்றை ஒரு அடியான் பூரணப்படுத்தி அவற்றிட்கு மாற்றமானவைகள் எதையும் செய்யாமல் அவற்றைக் கடைப்பிடித்தாலே தவிர இக்கலிமா அவனிடத்திலிருந்து நிறைவேறாது. அந்த நிபந்தனைகள் பின் வருமாறு:
1-அறிவு.
வணங்கப்படுவதற்கு தகுதியான ஒரே இறைவன் அல்லாஹ் ஒருவனே என்பதையும் அவனுக்கே சகல வணக்க வழிபாடுகளும் உரியன என்பதையும் அறிவதும், அல்லாஹ்வை அன்றி வணங்கப்படும் ஏனையவைகள் நன்மையோ தீமையோ செய்ய எவ்வித சக்தியுமற்றவை என்பதனால் அப்படிப்பட்ட பிழையான வழிபாடுகளை விட்டும் நீங்க வேண்டும் என்ற அறிவு. அறிவுக்கு மாற்றமானது அறியாமை. அறிவின்மையின் காரணமாக ஒருவன் அல்லாஹ்வுக்கு மாத்திரம் செய்ய வேண்டிய வணக்கத்தை அல்லாஹ் அல்லாதவைகளுக்கும் செய்து விடுவான். அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்:
‘ ஆகவே (நபியே) நிச்சயமாக அல்லாஹ்வைத்தவிர (வணக்கத்திற்குறிய வேறு) நாயன் இல்லை என்பதை நீர் அறிந்து கொள்வீராக” (திருமறை குர்ஆன் 47: 19)
மேலும் அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்:
‘ஆயினும் அவர்கள் அறிந்தோராக இருக்க சத்தியத்தைக் கொண்டு சாட்சியம் கூறினார்களோ அவர்களைத் தவிர (வேறு எவரும் பரிந்துரை செய்பவர்களல்லர்)” (திருமறை குர்ஆன் 43:86).
2.அல்லாஹ்வின் மீது எல்லா சந்தேகங்களையும் விட்டும் நீங்கிய உறுதி.
இக்கலிமா எதை அறிவிக்கின்றதோ அவைகளை செயலில் காட்டுவதாக உறுதியாக நம்பிக்கைக் கொள்ள வேண்டும் அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்
‘(உண்மையான) விசுவாசிகள் எததகையோரென்றால், அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் விசுவாசம் கொண்டு பின்னர் எவ்வித சந்தேகமும் கொள்ளாது இருந்தார்களே அத்தகையோர்தாம்” ( திருமறை குர்ஆன் 49:15).
3. கலிமாவின் எல்லா நிபந்தனைகளையும் நாவாலும் உள்ளத்தாலும் ஏற்றுக்கொள்ளுதல். அல்லாஹ்விடத்திலிருந்தும் அவனுடைய தூதரிடத்திலிருந்தும் எது நமக்கு கிடைத்ததோ அவைகள் அனைத்தையும் ஈமான் கொண்டு ஏற்றுக் கொள்ள வேண்டும். அவற்றிற்கு சிறிதேனும் மாற்றுக் கருத்துக்கள் கொடுக்காமலும், புது அர்த்தங்களை கொடுக்காமலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்:
‘ அல்லாஹ்வையும், எங்கள்பால் இறக்கப்பட்ட (இவ்வேதத்) தையும் நாங்கள் விசுவாசிக்கின்றோம் என (விசுவாசம் கொண்டோரே) நீங்களும் கூறுங்கள்” (திருமறை குர்ஆன் 2:136)
4. அல்லாஹ் மாத்திரமே ஒரே இறைவன் எனும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் கடைசி நபியும், தூதரும் ஆவார்கள் என்பதையும் மனமுவந்து விரும்பி ஏற்றுக் கொள்ளுதலும் அவற்றை எவ்வித கூடுதல் குறைவின்றி அப்படியே அமல் செய்து கொள்வதுமாகும். அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்:
‘ இன்னும் (மனிதர்களே) உங்களுக்கு வேதனை வருவதற்கு முன்னதாக உங்கள் இரட்சகன் பால் (தவ்பாச் செய்து) நீங்கள் திரும்பி விடுங்கள். அவனுக்கு முற்றிலும் நீங்கள் கீழ் படிந்தும் விடுங்கள் ” (திருமறை குர்ஆன் 39:54)
5. கலிமாவின் அவசியங்களை நேர்மையுடன் அவற்றை உண்மைப் படுத்தி நிறைவேற்றுதல். தனது ஈமானில் ஒருவன் உண்மையாளனாக எப்போது இருக்கின்றானோ அப்போதுதான் அவன் அல்லாஹ்வின் வேதத்தில் கூறப்படுபவைகளையும் அவனுடைய தூதரின் வழி முறைகளையும் உண்மைப் படுத்துவான். அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்:
‘ விசுவாசம் கொண்டோரே நீங்கள் அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள். (சொல்லாலும், செயலாலும்) உண்மையாளர்களுடனும் ஆகிவிடுங்கள்” (திருமறை குர்ஆன் 9:119)
6. சகல வணக்க வழிபாடுகளையும் தூய்மையுடன் அல்லாஹ்வுக்கு மாத்திரம் நிறைவேற்றுதல். ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கக்கூடிய அனைத்த விடயங்களிலிருந்தும் தன்னை தூரப்படுத்தி தன்னிடத்தில் மனத்தூய்மை உண்டாக்கிக் கொள்ள வேண்டும். அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்:
‘தூய மார்க்கம் (வழிபாடு) அல்லாஹ்வுக்கே உரித்தானது என்பதை அறிந்து கொள்வீராக (39:3) மேலும் அல்லாஹ் கூறுகின்றான் : ‘இன்னும் அல்லாஹ்வை அவனுக்காகவே வணக்கத்தை கலப்பற்றதாக ஆக்கியவர்களாக (அணைத்து தீய வழிகளை விட்டும் நீங்கி இஸ்லாத்தின்பால் சாய்ந்தவர்களாக அவர்கள் அல்லாஹ்வை வணங்குவதற்காகவே தவிர (வேறெதையும்) அவர்கள் (அதில்) கட்டளையிடப்படவில்லை” (திருமறை குர்ஆன் 98:5)
இணை வைத்தவனாக, அல்லது முகஸ்துதிக்காக ஒருவன் எந்த அமலைச் செய்தாலும் அது அவனுக்கு எந்த பலனையும் அளிக்காது. ஏனைனில் அடிப்படை அம்சமாகிய மனத்தூய்மையை அவன் இழந்து விட்டான். அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்:
‘நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான் இதனைத்தவிர (மற்ற) எதனையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான். எவர் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றாரோ அவர் திட்டமாக மகத்தான பாவத்தை பொய்யாக கற்பனை செய்து விட்டார் ” (திருமறை குர்ஆன் 4:48)
7. ஷஹாதாக் கலிமாவின் மீது பற்றுதல் (நேசம்) வைத்தல்.
உயரந்த அல்லாஹ்விடம் பற்றுதல், அவனுடைய தூதரிடம் பற்றுதல் அவனுக்கு வணக்கம் புரியும் உண்மை அடியார்களிடம் பற்றுதல் வைத்தல். இக்கலிமாவின் மூலம் ஒருவன் அனைவரையும் விட அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் அன்பு வைப்பதில் முற்படுத்த வேண்டும். அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்
‘(நபியே மனிதர்களிடம்) நீர் கூறுவீராக: நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னை நீங்கள் பின் பற்றுங்கள். (அவ்வாறு நீங்கள் செய்தால்) உங்களை அல்லாஹ் நேசிப்பான். உங்கள் பாவங்களையும் உங்களுக்காக அவன் மன்னித்து விடுவான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவன். மிகக்கிருபையுடையவன்” (திருமறை குர்ஆன் 3:31)
முஹம்மது ரசூலுல்லாஹ்வின் பொருள்
‘ஷஹாதத்து அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்” என்பதன் பொருள் யாதெனில்: முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய உண்மைத் தூதராவார் என உள்ளத்தால் உறுதி கொண்டு நாவால் மொழிந்து சாட்சி கூறுவதும் ஆகும். அல்லாஹ்விpன் கட்டளைக்குப் பின் மனிதர்கள் அனைவரும் பின் பற்றுதற்குறியவர் அல்லாஹ்வின் கடைசித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களைத்தவிர வேறு யாருமில்லை என உறுதியாக சாட்சியம் கூற வேண்டும். எதைச் செய்யுமாறு அவர்கள் கட்டளையிட்டார்களோ அதைச் செய்வதில் அவர்களைப் பின்பற்ற வேண்டும். எதைத்தடுத்தார்களோ அதைச்செய்யாமல் முற்றிலும் தவிர்ந்து கொள்ள வேண்டும். அவர்கள் அறிவித்த அனைத்தும் சரியானது என அவர்களை உண்மைப் படுத்த வேண்டும். அவர்கள் எதை மார்க்கமாக எமக்கு காட்டி தந்தார்களோ, எவ்வாறு அல்லாஹ்வை வணங்க வேண்டுமென அறிவத்து தந்தார்களோ அவ்வாறே அதில் கூடுதல் குறைவின்றி நாம் அல்லாஹ்வை வணங்க வேண்டும். முஹம்மத் (ஸல்) அவர்களை எல்லா விஷயங்களிலும் நாம் முழுமையாக பின் பற்ற வேண்டும். நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘யார் (எனது வழிமுறைகளை பின் பற்றி) என் வழி நடக்கிககின்றார்களோ அவர் அல்லாஹ்வுக்கு வழிபட்டவர் ஆவார். யார் (எனது வழி முறைகளை பின் பற்றாமல்) எனக்கு மாறு செய்கின்றானோ அவன் அல்லாஹ்வுக்கு மாறு செயதவனாகின்றான் (ஆதாரம் புகாரி, முஸ்லிம்)
இஸ்லாத்தில் புதிதாக ஒன்றை நுழைக்க முடியாது. நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நமது இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும்” (ஆதாரம் புகாரி, முஸ்லிம்)
கடைசியாக நாம் இங்கே ஒரு முக்கிய விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் அதாவது நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைத்தன்மை உண்டு, அவர்கள் அனைத்திற்கும் சக்தி பெற்றவர்கள், அவர்களையும் நாம் வணங்கலாம் என்ற கொள்ளை இஸ்லாத்தில் கிடையாது. வணங்கப்பதுவதற்கு தகுதியான நாயன் அல்லாஹ் ஒருவன் மாத்திரமே. நாயகம் (ஸல்) அவர்களுக்கு எவ்வித சக்தியுமில்லை. அவர்களை யாரும் வணங்க முடியாது. அவர்களும் அல்லாஹ்வைத்தான் வணங்கினார்கள். அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும், அவனுடைய தூதரும் ஆவாரெனவும், அவர்கள் அல்லாஹ் நாடியதைத்தவிர தாமாகவே தனக்கோ, அல்லது வேறு யாருக்காவதோ எப்பிரயோஜனத்தையோ, எக் கெடுதலையும் செய்யவோ அவர்கள் சக்தி பெற மாட்டார்கள் எனவும் நாம் உறுதியாக விசுவாசம் கொள்ள வேண்டும்.
ரசூல் (ஸல்) மட்டுமல்ல வேறு எந்த நபிமார்களும், வலியுல்லாக்களும், அவ்லியாக்களும், அன்பியாக்களும் வணங்குவதற்கும், வேறு எதற்கும் தகுதி பெற மாட்டார்கள்.அவர்களும் நம்மைப் போல மனிதர்கள்தான். அவர்களுக்கு பாத்தியா, மொளலூது என்று ஓதி இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை கடைபிடித்து வரும் எல்லோரும் நிச்சயம் வழிகேட்டில் இருக்கிறார்கள். நிச்சயம் இறைவனால் மன்னிக்கப்படாத குற்றத்தை புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

Sunday, 27 May 2012

உழு இல்லாமல் குர்ஆனைத் தொடலாமா? ஓதலாமா?


Inline images 1
உழு இல்லாமலும்மாதவிடாய் காலத்திலும் குர்ஆனைத் தொடக்கூடாது என்ற சிலர் வாதிடுகிறார்கள் அதற்கு அவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரத்தின் உண்மைத் தன்மையை நாம் ஆய்வு செய்தால் அவர்களின் வாதம் தவறானது என்பதையும்,உழு இல்லாமலும்மாதவிடாய் நேரத்திலும் திருமறைக் குர்ஆனைத் தொடுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்பதை நாம் அறிந்துகொள்ள முடியும்.

குர்ஆனைத் தூய்மையின்றித் தொடக்கூடாது என்று வாதிடுபவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரங்களுக்குறிய பதில்களைப் பார்ப்போம்.

தூய்மையில்லாதவர்கள் திருமறைக் குர்ஆனைத் தொடக் கூடாது என்று வாதிடுபவர்கள் உமர் (ரலி) அவர்கள் தொடர்பான ஒரு தகவலை ஆதாரமாக் காட்டுகிறார்கள்.

முதல் வாதமும்பதிலும்.
உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னால் அவர்களின் சகோதரியிடம் குர்ஆனின் வசனங்கள் எழுதப்பட்ட ஏட்டைக் கேட்ட நேரத்தில் அவருடைய சகோதரி அவர்களை நோக்கி, "நீங்கள் அசுத்தமாக இருக்கின்றீர்கள். தூய்மையானவர்களைத் தவிர இதை எவரும் தொடக் கூடாது'' என்று கூறினார்கள்.

(முஸ்னத் பஸ்ஸார் – 279)

முதலாவது இந்தச் செய்தியை ஆதாரமாகக் கொள்ள முடியாது ஏன் என்றால் மேற்கண்ட செய்தி நபியவர்கள் கூறியதாகவோ,அல்லது நபியவர்களின் நடைமுறையாகவோ அறிவிக்கப்படவில்லை. மாறாக உமர் (ரலி) அவர்களின் சகோதரியின் கூற்றாகத் தான் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால் இதனை ஆதாரமாகக் ஏற்றுக் கொள்ள முடியாது.

இரண்டாவது விஷயம் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெரும் உஸாமத் பின் ஸைத் என்பவர் பலவீனமானவர் என்று இமாம் ஹைஸமீ குறிப்பிடுகின்றார். (மஜ்மவுஸ் ஸவாயித்)

பைஹகியில் இதே ஹதீஸ் இடம் பெற்றுள்ளது அதில் இடம் பெரும் காஸிம் பின் உஸ்மான் அல்பஸரி என்பவர் பலவீனமானவர் என்றும் இவருடைய ஹதீஸ்கள் பின்பற்ற ஏற்றமானது அல்ல என்றும் ஹதீஸ் கலை மேதை இமாம் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள் (லிஸானுல் மீஸான்)

இரண்டாவது வாதமும்பதிலும்.

அடுத்ததாக திருமறைக் குர்ஆனின் 56வது அத்தியாயத்தின்79வது வசனத்தை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.
தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொடமாட்டார்கள். (அல்குர்ஆன் - 56 : 79)
இந்த வசனத்தைத் தான் வலுவான ஆதாரமாக இவர்கள் காட்டுகிறார்கள் இந்த வசனத்தை மேலோட்டமாகப் பார்க்கும் போது குர்ஆனை உலு இல்லாதவர்களும் மாதவிடாய் பெண்களும் திருமறைக் குர்ஆனைத் தொடக்கூடாது என்பது போன்ற தோற்றத்தை இது ஏற்படுத்தினாலும்இந்த வசனத்திற்கு முந்தைய வசனங்களையும்இது போல் அமைந்த மற்ற வசனங்களையும் நாம் ஆராய்கின்ற நேரத்தில் இவர்களின் வாதம் தவறானது என்பதை தெளிவாக அறியக் கிடைக்கிறது.

மேற்கண்ட வசனத்தில் இடம் பெற்றுள்ள தூய்மையானவர்கள் யார் என்பதையும்அதைத் தொடமாட்டார்கள் என்பது எதைப்பற்றியது என்பதையும் முதலில் அறிந்து கொள்வோம்.

முதலாவது விஷயம் நபியவர்களுக்கு இறக்கியருளப்பட்ட திருமறைக் குர்ஆன் புத்தக வடிவில் அவர்களுக்கு இறக்கப்படவில்லை. மாறாக ஒலி வடிவில்தான் இறக்கப்பட்டது. திருமறைக் குர்ஆன் இறங்கும் போது நபி (ஸல்) அவர்கள் அதனை மனப்பாடம் செய்து கொள்வார்கள்.

ஒலி வடிவில் திருமறைக் குர்ஆன் இறக்கப்பட்டிருக்கும் போது அதனைத் தொடுதல் என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லாமல் போகிறது. புத்தக வடிவில் அல்லது தொடும் விதத்தில் அல்லாஹ் திருக்குர்ஆனை இறக்கியிருந்தால் மட்டுமே தொடுதல் என்ற ஆய்வுக்கு இங்கு தேவை ஏற்படும்.

ஆக தொடுதல் என்ற வாதம் நமது கையில் உள்ள குர்ஆனைப் பற்றியதல்ல என்பதை இதன் மூலம் நாம் விளங்க முடியும். இதற்கு முந்தைய வசனத்தை கவணிக்கும் போது இதனை நாம் தெளிவாக விளங்களாம்.

இது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கும் மகத்துவமிக்க குர்ஆனாகும். தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொட மாட்டார்கள். அகிலத்தின் இறைவனிடமிருந்து (இது) அருளப்பட்டது.

(அல்குர்ஆன் - 56 : 77. 79)

56 : 79 வசனத்திற்கு முன்புள்ள இரண்டு வசனங்களையும் பார்க்கும் போது ஒரு விஷயம் நமக்குத் தெளிவாகத் தெரிகின்றது. அதாவது இது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கும் மகத்துவமிக்க குர்ஆன் என்று அல்லாஹ் கூறுகிறான். அடுத்த வசனத்தில் தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொட மாட்டார்கள் என்று கூறுகிறான்.

இப்போது அதை என்ற சொல் நம் கையில் இருக்கும் திருக்குர்ஆனைப் பற்றிப் பேசவில்லை. மாறாக பாதுகாக்கப்பட்ட ஏட்டில் (லவ்ஹுல் மஹ்ஃபூலில்) உள்ள திருக்குர்ஆனைப் பற்றித் தான் பேசுகின்றது என்ற உண்மை தெரியவருகிறது.

இதற்கு ஆதாரமாக மேலும் சில திருமறை வசனங்கள் அமைந்திருக்கின்றன.
அவ்வாறில்லை! இது ஓர் அறிவுரை. விரும்பியவர் படிப்பினை பெற்றுக் கொள்வார். இது தூய்மைப்படுத்தப்பட்டு உயர்வாக்கப்பட்ட மதிப்புமிக்க ஏடுகளில் உள்ளது. மரியாதைக்குரிய நல்லோர்களான எழுத்தர்களின் கைகளில் உள்ளது. (அல்குர்ஆன் - 80 : 11-16)
இவ்வசனமும் திருக்குர்ஆனின் மூலப்பிரதி எங்குள்ளது என்பதைப் பற்றி பேசுகின்றது. இவ்வசனங்களிலும் 56 : 79வசனத்தில் கூறப்பட்டதைப் போன்றே கூறப்பட்டிருந்தாலும் 56 : 79 வசனத்தை விட கூடுதல் தெளிவுடனும் விளக்கத்துடனும் காணப்படுகின்றது.

தூய்மையானவர்கள் என்று 56 : 79 வசனத்தில் கூறப்பட்டவர்கள் வானவர்கள் தாம் என்பதை இவ்வசனம் தெளிவுபடுத்துகிறது.

இறை நிராகரிப்பாளர்கள் இந்தக் குர்ஆனை ஷைத்தான்கள் கொண்டு வருகின்றனர் என எண்ணிணார்கள். அவர்களுக்கு அல்லாஹ் பின்வருமாறு பதில் கூறினான்.

இதை ஷைத்தான்கள் இறக்கிடவில்லை. அது அவர்களுக்குத் தகுதியானதும் அல்ல. அதற்கு அவர்களால் இயலாது. அவர்கள் செவியேற்பதை விட்டும் தடுக்கப்பட்டவராவர். (அல்குர்ஆன் - 26 : 210 212)

இந்த வசனத்தில் சொல்லப்பட்டதைப் போன்று திருக்குர்ஆன் தூய்மையானவர்களான மலக்குமார்களின் கையிலே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஷைத்தான்களால் இதைத் தொடமுடியாது என்ற பொருளில் தான் 56 : 79 வது வசனமும் அமைந்துள்ளது.

தொட மாட்டார்கள் என்பதற்கும் தொடக் கூடாது என்பதற்கும் உள்ள வேறுபாட்டை நாம் அறிவோம்.

தொடக் கூடாது என்றால் அது கட்டளையிடுகிறது என்பது பொருள்.

தொட மாட்டார்கள் என்றால் அது ஒரு செய்தியை நமக்கு எடுத்துக் கூறுகிறது என்று பொருள்.

மேற்கண்ட வசனத்தில் தொடக் கூடாது எனக் கூறப்படவில்லை. மாறாக தொட மாட்டார்கள் எனக் கூறப்படுகிறது. உளூ இல்லாதவர்களும்மாதவிடாய்ப் பெண்களும் குர்ஆனைத் தொடக் கூடாது என்ற அர்த்தம் தான் இந்த வசனத்தின் பொருள் என்றால் தூய்மையானவர்களைத் தவிர வேறு யாரும் இக்குர்ஆனைத் தொடக் கூடாது என்று தொடுவதற்கு தடைபோடும் விதத்தில் அல்லாஹ் கூறியிருப்பான்.

ஆனால் மற்றவர்கள் இதைத் தொட மாட்டார்கள் என்று அல்லாஹ் கூறியிருப்பது பாதுகாக்கப்பட்ட ஏட்டில் உள்ள குர்ஆனை மலக்குமார்களைத் தவிர மற்றவர்களால் தொட முடியாது என்ற பொருளையே தருகிறது.

மேலுள்ள வசனங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்துப் பார்க்கும் போது 56 : 79 வது வசனத்தில் சொல்லப்பட்டதூய்மையானவர்கள் என்பது வானவர்கள் என்பதும்அதை என்று கூறப்பட்டுள்ளது வானத்தில் பாதுகாக்கப்பட்ட ஏட்டில் உள்ள குர்ஆன் என்பதும்ஐயத்திற்கு இடமின்றி தெளிவாகின்றது. எனவே இந்த வசனத்தை வைத்துக் கொண்டு தூய்மையான நிலையில் தான் குர்ஆனைத் தொட வேண்டும் என்று வாதிட முடியாது.

காபிர்களுக்கே நபியவர்கள் திருமறை வசனத்தை எழுதி அனுப்பியிருக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரோமாபுரியின் அரசர் ஹெர்குலிஸுக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு கூறப்பட்டிருந்தது:

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அல்லாஹ்வின் அடியாரும் அவனது தூதருமான முஹம்மது என்பார்ரோமாபுரிச் சக்கரவர்த்தி ஹெர்குலிஸுக்கு எழுதிக் கொள்வது: நேர்வழியைப் பின்பற்றுவோர் மீது சாந்தி நிலவட்டுமாக! நிற்க! இஸ்லாத்தைத் தழுவுமாறு உமக்கு நான் அழைப்பு விடுக்கின்றேன். நீர் இஸ்லாத்தை ஏற்பீராக! நீர் ஈடேற்றம் பெற்றிடுவீர்! அல்லாஹ் உமக்கு இரு மடங்கு சன்மானம் வழங்குவான். நீர் புறக்கணித்தால் (உமது) குடிமக்களின் பாவமும் உம்மைச் சாரும்.
"வேதமுடையோரே! நாம் அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்கக் கூடாதுஅவனுக்கு இணையாக எதையும் கருதக் கூடாதுஅல்லாஹ்வையன்றி நம்மில் ஒருவர் மற்றவரைக் கடவுள்களாக ஆக்கக் கூடாது என்ற எங்களுக்கும்,உங்களுக்கும் பொதுவான கொள்கைக்கு வாருங்கள்!'' என்று கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் "நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே சாட்சிகளாக இருங்கள்!'' எனக் கூறி விடுங்கள்! (அல்குர்ஆன் 3:64)
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)நூல் : புகாரி 7, 2941

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிமல்லாத ஒரு மன்னருக்கு "பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்மற்றும் 3:64ஆகிய குர்ஆன் வசனங்களை எழுதி அனுப்பியுள்ளார்கள். தூய்மையற்றவர்கள் குர்ஆனைத் தொடக் கூடாது என்றிருந்தால் மாற்று மதத்தில் உள்ளவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு எழுதிக் கொடுத்திருக்க மாட்டார்கள்.

ஆகவே திருமறைக் குர்ஆனை உழு இல்லாதவர்களும்,மாதவிடாப் பெண்களும் தொடுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்பதை மேற்கண்ட ஆதாரங்களின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

Wednesday, 2 May 2012

மரணித்துவிட்ட ஒருவரை அழைக்கலாமா.?




ஓரிறைவன் என்று பொதுவாக சொல்லும்பொழுது உலகத்தில் இருக்கக்கூடிய எல்லா ஆஸ்திகர்களும் அதாவது எல்லா மதத்தவர்களும் இறைவன் ஒருவன் தான் என்பதனை ஒத்துக்கொள்வார்கள். ஒரே இறைவன்தான் உலகத்தில் இரண்டு இறைவன் இல்லை என்று யாருக்குமே மாற்று கருத்து இருக்காது. ஆனால் அந்த ஓரிறைக் கொள்கையில் எவ்வாறு மதவாதிகள் வேறுபடுகிறார்கள் என்று சொன்னால் இறைவனுக்கு அவதாரம் உண்டு என்ற அடிப்படையிலே ஒரு சாராரும் இறைவனுக்கு குமாரனுண்டு என்ற அடிப்படியிலே ஒரு சாராரும் இறைவனை நேரடியாக நாம் நெருங்க முடியாது அந்த இறைவனை நெருங்குவதற்கு குட்டி குட்டி தெய்வங்களை கடவுள்களை உருவாக்கிக் கொண்டு அவற்றை வணங்கி வருகிறார்கள்.

ஆனால் முஸ்லிம்களை பொருத்த மட்டில் இது போன்ற நம்பிக்கைகள் கிடையாது. அவதார நம்பிக்கையோ அல்லது இறைவனுக்கு குமாரன் இருக்கிறான் என்ற நம்பிக்கையோ அல்லது இறைவனை நெருங்குவதற்கு குட்டி குட்டி தெய்வங்களை சிலைகளாக படங்களாகவோ படைத்து அவற்றை வைத்துத்தான் அந்த ஓர் இறைவனை நெருங்க முடியும் என்ற நம்பிக்கையும் முஸ்லிம்களிடம் இல்லை.

ஆனால் ஓரே இறைவனை ஏற்றுக்கொண்டிருக்கிறோம் என்று சொல்லக்கூடிய முஸ்லிம்கள் மத்தியில் அந்த ஓரிறைக் கொள்கைக்கு மாற்றமாக எப்படிப்பட்ட சிந்தனைகள் எப்படிப்பட்ட கருத்தோட்டங்கள் இருக்கின்றன என்பதை முஸ்லிம்கள் அறிந்து கொள்வது அவசியமாக இருக்கின்றது. அதாவது சிலைகள் மீதோ அல்லது அவதாரங்கள் மீதோ நம்பிக்கை இல்லாத முஸ்லிமகள் இறந்துபோன பெரியார்களை அதாவது அவ்லியாக்களை இறைவனுடைய நல்லடியார்கள் என்ற அடிப்படையிலே இறைவனை அவர்கள் நெருங்கச் செய்வார்கள் இறைவனிடம் தங்களுக்காக சிபாரிசு செய்வார்கள், எனவே அவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுப்பதும் அவர்களுக்குறிய சடங்குகள் செய்வதும் இஸ்லாத்தில் உள்ளவைதான் என்ற நம்பிக்கை முஸ்லிம்களிடம் இருக்கிறது. அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வழிபாட்டை அல்லாஹ் அல்லாதவர்களுக்கு தர்ஹாக்களை கட்டி வைத்துக்கொண்டு சமாதி வழிபாடு செய்கின்றனர். ஆனால் அல்குர்ஆன் இறைவனுடய இறுதி வேதம் இதனை தெளிவாக மறுக்கிறது.

6:51. “நபியே! எவர்கள் மறுமையில் தங்கள் இரட்சகனிடம் ஒன்று சேர்க்கப்பட்டு விசாரணை செய்யப்படுவோம் என்று பயப்படுகிறார்களோ அவர்கள் பாவத்திலிருந்து விலகி பரிசுத்தவான்களாகுவதற்காக நீர் எச்சரிக்கை செய்யும். அவர்களுக்கு (அந்நாளில்) உதவியாளனும், பரிந்து பேசுபவனும் அந்த அல்லாஹ்வையன்றி வேறு ஒருவருமில்லை

அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், ”அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை”" (என்கின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்; பொய்யனாக நிராகரித்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான். (அல்குர்ஆன் 39:3)

தங்களுக்கு (யாதொரு) நன்மையோ தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை (முஷ்ரிக்குகள்) வணங்குகிறார்கள்; இன்னும் அவர்கள், ”இவை எங்களுக்கு அல்லாஹ்விடம் மன்றாட்டம்(துஆ) செய்பவைஎன்றும் கூறுகிறார்கள்; அதற்கு நீர்; ”வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ் அறியாதவை (இருக்கின்றன என எண்ணிக் கொண்டு) நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அவன் மிகவும் பரிசத்தமானவன். அவர்கள் இறைவைப்பவற்றை விட மிகவும் உயர்ந்தவன்என்று கூறும். (அல்குர்ஆன் 10:18)

 “இவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை தங்களுக்குச் சிபாரிசு செய்பவை என்று எண்ணி எடுத்துக் கொண்டிருக்கின்றனரா? அவை எத்தகைய சக்தியுமில்லாமலும் எதையும் அறியாமலும் இருந்தாலுமா அவற்றை உங்களுக்கு சிபாரிசு செய்பவையாக எடுக்கின்றீர்கள் என நபியே! நீர் கேளும். மேலும் நபியே! நீர் சொல்லும்சிபாரிசுகள் யாவும் அல்லாஹ்வுக்கே உரியன. (ஆகவே அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் யாரும் சிபாரிசு செய்ய முடியாது). வானங்கள், பூமியின் ஆட்சி முழுவதும் அவனுக்குரியதே! (மறுமையில்) அவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்”. (அல்குர்ஆன் 39:43-44)

(தம்) செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று (நபியே!) நீர் கேட்பீராக.யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான். (அல்குர்ஆன் 18:102-104)

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களின் நிலை :
இன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை “(அவர்கள்) இறந்துவிட்டார்கள்என்று கூறாதீர்கள்; அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள்; எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள்.(அல்குர்ஆன் 2:154) 

அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள்தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் – (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள்(அல்குர்ஆன் 3:169)

மேற்கண்ட வசனங்களில் அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் இருகிறார்கள் என்ற வாசகமும் ,அதற்கு விளக்கமாக அந்த உயிரின் தன்மையை நீங்கள் உணர முடியாது என்ற வாசகமும் கவனிக்கதக்கது. மேலும் உயிருடன் உள்ளதாக கூறப்படும் அவ்வுயிர்கள் இவ்வுலகத்திற்கு வர முடியுமா ? என்பதையும் நபி (ஸல்) விளக்கியுள்ளார்கள்.

மேற்கண்ட இறைவசனத்தின் விளக்கத்தைப்பற்றி அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடம் கேட்டோம் இதற்கு நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள்
அவர்களின் உயிர்கள் பச்சை நிரப்பறவைகளின் உருவத்தில் அர்ஷில் தொங்கவிடப்பட்ட கூண்டில் உள்ளது. அது சொர்க்கத்தில் தான் விரும்பிய இடமெல்லாம் சென்று பின் அக்கூண்டில் வந்து தஞ்சமடைந்துவிடும் அல்லாஹ் அவர்கள் முன்னிலையில் தோன்றி ,உங்களுக்கு ஏதாவது விருப்பம் உண்டா? என்று கேட்ப்பான். எங்களுக்கு என்ன தேவை இருக்கிறது ? நாங்கள் சொர்க்கத்தில் விரும்பிய இடமெல்லாம் சுற்றுகிறோம் எனக் கூறும். இப்படி மூன்றுமுறை நடக்கும். நம்மை (அல்லாஹ் விடமாட்டன்) என்று தெரிந்து கொண்ட பிறகு எங்கள் உயிர்களை எங்கள் உடல்களில் செலுத்தி ,இன்னொரு முறை உன் வழியில் கொள்ளப்பட ஏற்பாடு செய் என்று கூறுவார்கள். அல்லாஹ் இவர்களுக்கு வேறு எந்த தேவையுமில்லை என்று விட்டு விடுவான்.” அறிவிப்பாளர் : மஸ்ரூக் (ரலி) நூல்கள்: முஸ்லீம் ,அபூதாவுத்,திர்மிதி

உயிருடன் இருக்கிறார்கள் என்றால் என்ன பொருள் என்பதற்கு அழகான விளக்கத்தை அல்லாஹ்வின் தூதரே தந்துவிட்டார்கள். அவர்கள் உயிருடன் இவ்வுலகத்தில் இல்லை. சொர்க்கத்தில் தான் இருகிறார்கள். மார்க்கபோரில் ஈடுபட்டு . மரணமானவர்கள் கூட  இவ்வுலகத்திற்கு வர இயலாது என்பதை அறியலாம்.

உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?” என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள்அல்லாஹ்என பதிலளிப்பார்கள்; “அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?” என்று நீர் கேட்பீராக(அல்குர்ஆன் 10:31)

 உண்மையாகவே அவன் தான் உங்களைப் படைத்துப் பாதுகாக்கும் அல்லாஹ்; இந்த உண்மைக்குப் பின்னரும் (நீங்கள் அவனை வணங்காவிட்டால்) அது வழிகேட்டைத் தவிர வேறில்லை; (இப்பேருண்மையை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகிறீர்கள் (அல்குர்ஆன் 10:32)

இறைவனுடைய அடியார்களை தங்களுக்கு இறைவனிடம் பரிந்துரை செய்யக்கூடியவர்களாக அல்லாஹ்விடம் நெருங்கச்செய்வார்கள் என்ற அடிப்படையில் இறந்து போனவர்களை அவ்லியாக்களாக எடுத்துக்கொண்டு அவர்களுக்கு சடங்கு சம்பிரதாயங்கள் செய்வது அவர்களுடைய அடக்கஸ்தலங்களுக்குச் சென்று எங்களுக்கு குழந்தை பேற்றைத் தாருங்கள், நோய்களை குணமாக்குங்கள் என்று வேண்டுவது அல்லது அவர்களை அல்லாஹ்விடம் எங்களுக்கு கேட்டுப் பெற்றுத்தாருங்கள் எங்களுக்காக முறையிடுங்கள் அல்லது அவர்களுடைய பொருட்டால் அல்லாஹ் எங்களுக்கு அதனை நிரைவேற்றித்தா என்று கேட்பது, கப்ருகளை சுற்றி வலம் வருவது, அங்குள்ள படிக்கட்டுகளை முத்தமிடுவது இன்னும் கூடு, கொடியேற்றம், சந்தனம் பூசுதல், மேளதாளமங்கள் இன்னும் ஏராளமான இணைவைப்பு காரியங்கள் செய்து வழிகேட்டின்பால் சென்று மன்னிக்கப்படாத பாவத்திற்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்வோமாகா!

அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்