(கப்று வணங்கிகளுக்காகவும், பாத்தியா மொளலூது என்று இறந்தவர்களுக்காகவும் அவுலியாக்கள், வலியுல்லாக்களுக்கும் ஓதுவதால் நன்மைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று நம்பி இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை அறியாமல் செய்து வரும் மக்களுக்காக ஒரு சிறப்புப் பார்வை)
லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவை வாயால் மட்டும் மொழிந்து விட்டால் போதுமானது என்று நினைத்து அதை செயல் வடிவத்தில் கடை பிடிக்காமல். இறைவனுக்கு இணைவைக்கும் செயலாக தர்ஹாக்களில் சென்று வலியுல்லாக்களிடம் உதவி தேடுவதும். நாம் செய்த நன்மை தீமைகளினால் மட்டுமே சொர்க்கம், நரகம் தீர்மானிக்கப்படும் என்ற இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையையே நம்பாமல். பாத்தியா, மொளலூது ஓதி எல்லாவற்றையும் சரி செய்து விடலாம் என்று நினைத்து செய்தும். இறைவனோ, ரசூல் (ஸல்) அவர்களோ அறிவித்துக் கொடுக்காத ஒன்றை, எந்த வித ஆதாரமும் இல்லாத ஒன்றை கடைபிடித்து இறைவனால் மன்னிக்கப்பட முடியாத குற்றமான இணை வைத்தலில் மூழ்கி கிடக்கும் நம் சமுதாயத்தில் யாரேனும் ஒருவரேனும் இக்கட்டுரையை படித்து திருந்தினார்கள் என்றால். இறைவன் அவர்களுக்கும் எமக்கும் இம்மையிலும், மறுமையிலும் நற்கூலி அளிப்பானாக ஆமீன்.
லாயிலாஹ இல்லல்லாஹ்வின் பொருள் யாதெனில் பூமியிலோ, வானத்திலோ உண்மையாக வணங்கப்படுவதற்க்குத் தகுதியான இறைவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை அவன் தனித்தவன். இணை துணையற்றவன் அவனுக்கு நிகராக எதுவுமில்லை ஏனெனில் பாதிலா(பொய்யா)ன கடவுள்கள் அதிகமுள்ளது என்றாலும். உண்மையாக வணங்கப்படுவதற்கு தகுதியானவன் அல்லாஹ் மாத்திரம்தான். அவன் தனித்தவன். யாதொரு இணை துணையுமற்றவன் என்பதாகும் அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்:
‘இரவைப் பகலிலும் பகலை இரவிலும் நுழைவிக்கும் மாபெரிய ஆற்றலாகிய, அது ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் அவன்தான் உண்மையானவன். மற்றும் நிச்சயமாக அவனையன்றி (வேறு) எதை அவர்கள் பிரார்த்திக்கின்றார்களோ அதுவே பொய்யானதாகும். இன்னும் நிச்சயமாக அல்லாஹ் அவன்தான் மிக உயர்ந்தவன் மிகப்பெரியவன். (திருமறை குர்ஆன் 22:62)
இக்கலிமா (லாயிலாஹ இல்லல்லாஹ்)வின் பொருள் ‘அல்லாஹ்வைத்தவிர வேறு படைக்கக்கூடியவன் யாருமில்லை” என்பது மட்டும் பொருளல்ல. முக்கியப் பொருளாக ஏகத்துவத்தை மிகவும் வலியுறுத்தக் கூடியதாக இருக்கிறது. ஏனெனில் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் எந்தக் குறைஷிக் காஃபிர்களுக்கு மத்தியில் நபியாக அனுப்பப்பட்டாரோ அந்தக் குறைஷிக் காஃபிர்கள் கூட படைக்கக்கூடியவன் நிர்வகிக்கக் கூடியவன் எல்லாமே அல்லாஹ்தான் என ஏற்றுக் கொண்டிருந்தார்கள். என்றாலும் வணக்கங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கு இணை துணையின்றி அவனுக்கு மாத்திரம்தான் இருக்க வேண்டும் என்ற (ஓரிரைக்) கொள்கையை அவர்கள் நிராகரித்து விட்டார்கள். அல்லாஹ் அவர்களைப்பற்றி தனது திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்:
‘(என்ன) இவர் (நம்முடைய வணக்கத்திற்குறிய) தெய்வங்களை (நிராகரித்து விட்டு) ஒரே ஒரு வணக்கத்திற்குறியவனாக ஆக்கிவிட்டாரா ? நிச்சயமாக இது ஓர் ஆச்சர்யமான விஷயம் தான் (என்றும் கூறினர்)” (திருமறை குர்ஆன் 38:5)
இக்கலிமா (லாயிலாஹ இல்லல்லாஹ்) வின் மூலம் அல்லாஹ் அல்லாத எந்தவொன்றை வணங்கினாலும் அது பாதிலா(பொய்யா)க்கிவிடும் என்பதையும், வணக்கம் அல்லாஹ்வுக்கு மாத்திரம் தனித்ததாக இருக்க வேண்டும் என்பதையும் அக்காபிர்கள் விளங்கியிருந்தார்கள். அதனால் அதை அவர்கள் விரும்பவில்லை. எனவேதான் நாயகம் (ஸல்) அவர்கள், வணங்கப்படுவதற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று அவர்கள் சாட்சி கூறி, அக்கலிமாவில் கூறப்படும் உண்மை அம்சங்களை ஏற்று நடக்கும் வரை அவர்களுடன் போர் புரிந்தார்கள் . அதுதான் அல்லாஹ்வை தனித்தவனாக, இணை துணையின்றி வணக்கத்தின் மூலம் அவனை ஒருமைப் படுத்துவதாகும். அதுதான் உண்மையான ஏகத்துவம்.
இக்கலிமா ( மேற் கூறப்பட்ட அதனுடைய சரியான பொருளின் பிரகாரம்) லாயிலாஹ இல்லல்லாஹ்வின் பொருள் அல்லாஹ் இருக்கிறான் அல்லது அல்லாஹ் படைக்க்கூடியவன், புதிதாக ஒன்றை உண்டாக்கும் சக்தி பெற்றவன் என்று மாத்திரம் ஏற்றுக் கொண்டிருக்கிற தற்காலத்தில் உள்ள கப்று வணங்கிகளின் கொள்கைகளை முறியடித்து விடுகின்றது. ஏனெனில் அவர்கள் இவ்வாறு ஒரு விதத்தில் தௌஹீதுர் ருபூபிய்யாவை ஏற்றிருந்தாலும் அவர்கள் அல்லாஹ் அல்லாதவைகளை வணங்குவதிலும் மரணித்தவர்களிடத்தில் உதவி தேடுவதிலும். நேர்ச்சைகளின் மூலம் அவர்களிடத்தில் நெருங்குவதிலும் அவர்களுடைய கப்றுகளைச் சுற்றி வணங்குவதிலும், அவர்களுடைய கப்றின் மண்கள் மூலம் பரக்கத் தேடுவதிலும் ஈடுபட்டிருக்கின்றனர்.
‘லாயிலாஹ இல்லல்லாஹ்” என்ற கலிமா அல்லாஹ் அல்லாத அனைத்தையும் வணங்குவதை விட்டு விடுவதையும் வணக்கத்தை அல்லாஹ்வுக்கு மாத்திரம் ஒருமைப்படுத்தி வணங்க வேண்டும் என்பதையும் அறவிக்கின்றது என்பதை இதற்கு முதல் குறைஷிக் காபிர்கள் நன்றாக அறிந்திருந்தனர். அதனால் அவர்கள் இதை மொழியவில்லை. அவர்கள் இக்கலிமாவை மொழிந்திருந்தால் அல்லாஹ்வுக்கு இணை வைத்திருக்க மாட்டார்கள் . ஏனெனில் இதன் பொருள் நன்றாகத் தெரியும். ஆனால் தற்காலத்தில் உள்ள கப்று வணங்கிகள் லாயிலாஹ இல்லல்லாஹ் எனும் கலிமாவை மொழிந்து அதன் பொருளை சரியாக அறிந்திருந்தும், மரணித்துவிட்ட அல்லாஹ்வின் நேசர்கள், ஸாலிஹீன்கள், அவ்லியாக்கள், வலியுல்லாக்கள் ஆகியோரிடம் பிரார்த்திப்பது கொண்டு இக்கலிமாவை முறித்து விடுகின்றனர்.
லாயிலாஹ இல்லல்லாஹ்வின் பொருள், அல்லாஹ் அல்லாத அனைத்தயும் வணங்குவதை விட்டு விட்டு, வணக்கத்தை அல்லாஹ்வுக்கு மாத்திரம் ஒருமைப்படுத்தி வணங்குவதைத்தான் அறிவிக்கின்றது என்று ஏராளமான ஹதீஸ்கள் வந்துள்ளன. இதுதான் நேர்வழி. அல்லாஹ் தூதர்களை எந்த உண்மையான மார்க்கத்தைக் கொண்டு அனுப்பி வைத்தானோ, மேலும் எந்த உண்மையைக் கொண்டு அவனுடைய வேதங்களில் இறக்கி வைத்தானோ அந்த உண்மையான மார்க்கமும் இதுதான். ஒரு மனிதன் லாயிலாஹ இல்லல்லாஹ் எனும் கலிமாவின் சரியான பொருளை அறியாமலும் மேலும் அக்கலிமா எதைக் கூறுகின்றதோ அதனடிப்படையில் அமல் செய்யாமலும் இதனை மொழிவது, அல்லது ஏகத்துவத்தைப் பற்றித் தெரியாமல் அல்லாஹ் அல்லாதவைகளுக்கு வணக்கத்தைச் செலுத்திக் கொண்டு, தன்னை ஒரு ஏகத்துவவாதி என வாதிடுவது ஏகத்துவத்தை அப்படியே முறித்து விடுகின்றது. இந்நிலையில் அவன் அல்லாஹ்வுக்கு இணை வைத்தவன் ஆகி விடுகின்றான்.
ஏகத்துவக் கலிமாவின் சிறப்புகள்
லாயிலாஹ இல்லல்லாஹ் எனும் ஏகத்துவக் கலிமாவை ஒருவன் நாவால் மொழிவதால் மாத்திரம் இதன் சிறப்புகளால் பிரயோஜனம் அடையமாட்டான். யார் இக்கலிமாவை மொழிந்து சரியான முறையில் விசுவாசம் கொண்டு இக்கலிமா கூறும் முறைப்படி அமலும் செய்கின்றாரோ அவருக்கே தவிர வேறு யாருக்கும் இது உண்மையான பிரயோஜனத்தை அளிக்காது. இக்கலிமாவின் மிகச் சிறந்த சிறப்புகளில் ஒன்று யாதெனில் அல்லாஹ்வின் திருப்தியை நாடி யார் இக்கலிமாவை மொழிகின்றாரோ அவருக்கு அல்லாஹ் நரகத்தை ஹராமாக்கி விடுகின்றான்.
உத்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் லாயிலாஹ இல்லல்லாஹ் எனும் கலிமாவை அதன் மூலம் அல்லாஹ்வின் திருப்தியை நாடி யார் மொழிகின்றார்களோ அல்லாஹ் அவர்களுக்கு நரகத்தை ஹராமாக்கி விடுகின்றான். (ஆதாரம் புகாரி,முஸ்லிம்)
ஏகத்துவக் கலிமாவின் கடமைகள்
ஷஹாதாஹ்(ஏகத்துவக்)கலிமாவிற்கு இரண்டு கடமைகள் உண்டு அவை.
1. ‘லாயிலாஹ” எனும் இச் சொல்லில் வணங்கப்படுவதற்கு தகுதியானவன் யாருமில்லை என்று மறுத்துரைப்பது.
2. ‘இல்லல்லாஹ்” எனும் இச்சொல்லில் அல்லாஹ்வைத் தவிர என்று தனிப்படுத்துவது.
அல்லாஹ்வுக்கன்றி வேறு யாருக்கும் அல்லது வேறு எதற்கும் தெய்வீகத்தன்மை கிடையாது என்பதை ‘லாயிலாஹ” எனும் வாசகமும் அல்லாஹ்வை மாத்திரமே விசுவாசித்து அவனுக்கு மாத்திரமே வணக்க வழிபாடுகளை செய்ய வேண்டும் என்பதையும் ‘இல்லல்லாஹ்” எனும் வாசகமும் தெளிவுபடுத்துகின்றது.
லாலிலாஹ இல்லல்லாஹ் எனும் கலிமாவின் நிபந்தனைகள்
ஏகத்துவக்கலிமாவிற்கு ஏழு நிபந்தனைகளை உலமாக்கள் கூறியுள்ளனர். அந்த ஏழு நிபந்தனைகளும் அதில் ஒன்ற சேர்ந்து அவற்றை ஒரு அடியான் பூரணப்படுத்தி அவற்றிட்கு மாற்றமானவைகள் எதையும் செய்யாமல் அவற்றைக் கடைப்பிடித்தாலே தவிர இக்கலிமா அவனிடத்திலிருந்து நிறைவேறாது. அந்த நிபந்தனைகள் பின் வருமாறு:
1-அறிவு.
வணங்கப்படுவதற்கு தகுதியான ஒரே இறைவன் அல்லாஹ் ஒருவனே என்பதையும் அவனுக்கே சகல வணக்க வழிபாடுகளும் உரியன என்பதையும் அறிவதும், அல்லாஹ்வை அன்றி வணங்கப்படும் ஏனையவைகள் நன்மையோ தீமையோ செய்ய எவ்வித சக்தியுமற்றவை என்பதனால் அப்படிப்பட்ட பிழையான வழிபாடுகளை விட்டும் நீங்க வேண்டும் என்ற அறிவு. அறிவுக்கு மாற்றமானது அறியாமை. அறிவின்மையின் காரணமாக ஒருவன் அல்லாஹ்வுக்கு மாத்திரம் செய்ய வேண்டிய வணக்கத்தை அல்லாஹ் அல்லாதவைகளுக்கும் செய்து விடுவான். அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்:
‘ ஆகவே (நபியே) நிச்சயமாக அல்லாஹ்வைத்தவிர (வணக்கத்திற்குறிய வேறு) நாயன் இல்லை என்பதை நீர் அறிந்து கொள்வீராக” (திருமறை குர்ஆன் 47: 19)
மேலும் அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்:
‘ஆயினும் அவர்கள் அறிந்தோராக இருக்க சத்தியத்தைக் கொண்டு சாட்சியம் கூறினார்களோ அவர்களைத் தவிர (வேறு எவரும் பரிந்துரை செய்பவர்களல்லர்)” (திருமறை குர்ஆன் 43:86).
2.அல்லாஹ்வின் மீது எல்லா சந்தேகங்களையும் விட்டும் நீங்கிய உறுதி.
இக்கலிமா எதை அறிவிக்கின்றதோ அவைகளை செயலில் காட்டுவதாக உறுதியாக நம்பிக்கைக் கொள்ள வேண்டும் அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்
‘(உண்மையான) விசுவாசிகள் எததகையோரென்றால், அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் விசுவாசம் கொண்டு பின்னர் எவ்வித சந்தேகமும் கொள்ளாது இருந்தார்களே அத்தகையோர்தாம்” ( திருமறை குர்ஆன் 49:15).
3. கலிமாவின் எல்லா நிபந்தனைகளையும் நாவாலும் உள்ளத்தாலும் ஏற்றுக்கொள்ளுதல். அல்லாஹ்விடத்திலிருந்தும் அவனுடைய தூதரிடத்திலிருந்தும் எது நமக்கு கிடைத்ததோ அவைகள் அனைத்தையும் ஈமான் கொண்டு ஏற்றுக் கொள்ள வேண்டும். அவற்றிற்கு சிறிதேனும் மாற்றுக் கருத்துக்கள் கொடுக்காமலும், புது அர்த்தங்களை கொடுக்காமலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்:
‘ அல்லாஹ்வையும், எங்கள்பால் இறக்கப்பட்ட (இவ்வேதத்) தையும் நாங்கள் விசுவாசிக்கின்றோம் என (விசுவாசம் கொண்டோரே) நீங்களும் கூறுங்கள்” (திருமறை குர்ஆன் 2:136)
4. அல்லாஹ் மாத்திரமே ஒரே இறைவன் எனும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் கடைசி நபியும், தூதரும் ஆவார்கள் என்பதையும் மனமுவந்து விரும்பி ஏற்றுக் கொள்ளுதலும் அவற்றை எவ்வித கூடுதல் குறைவின்றி அப்படியே அமல் செய்து கொள்வதுமாகும். அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்:
‘ இன்னும் (மனிதர்களே) உங்களுக்கு வேதனை வருவதற்கு முன்னதாக உங்கள் இரட்சகன் பால் (தவ்பாச் செய்து) நீங்கள் திரும்பி விடுங்கள். அவனுக்கு முற்றிலும் நீங்கள் கீழ் படிந்தும் விடுங்கள் ” (திருமறை குர்ஆன் 39:54)
5. கலிமாவின் அவசியங்களை நேர்மையுடன் அவற்றை உண்மைப் படுத்தி நிறைவேற்றுதல். தனது ஈமானில் ஒருவன் உண்மையாளனாக எப்போது இருக்கின்றானோ அப்போதுதான் அவன் அல்லாஹ்வின் வேதத்தில் கூறப்படுபவைகளையும் அவனுடைய தூதரின் வழி முறைகளையும் உண்மைப் படுத்துவான். அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்:
‘ விசுவாசம் கொண்டோரே நீங்கள் அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள். (சொல்லாலும், செயலாலும்) உண்மையாளர்களுடனும் ஆகிவிடுங்கள்” (திருமறை குர்ஆன் 9:119)
6. சகல வணக்க வழிபாடுகளையும் தூய்மையுடன் அல்லாஹ்வுக்கு மாத்திரம் நிறைவேற்றுதல். ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கக்கூடிய அனைத்த விடயங்களிலிருந்தும் தன்னை தூரப்படுத்தி தன்னிடத்தில் மனத்தூய்மை உண்டாக்கிக் கொள்ள வேண்டும். அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்:
‘தூய மார்க்கம் (வழிபாடு) அல்லாஹ்வுக்கே உரித்தானது என்பதை அறிந்து கொள்வீராக (39:3) மேலும் அல்லாஹ் கூறுகின்றான் : ‘இன்னும் அல்லாஹ்வை அவனுக்காகவே வணக்கத்தை கலப்பற்றதாக ஆக்கியவர்களாக (அணைத்து தீய வழிகளை விட்டும் நீங்கி இஸ்லாத்தின்பால் சாய்ந்தவர்களாக அவர்கள் அல்லாஹ்வை வணங்குவதற்காகவே தவிர (வேறெதையும்) அவர்கள் (அதில்) கட்டளையிடப்படவில்லை” (திருமறை குர்ஆன் 98:5)
இணை வைத்தவனாக, அல்லது முகஸ்துதிக்காக ஒருவன் எந்த அமலைச் செய்தாலும் அது அவனுக்கு எந்த பலனையும் அளிக்காது. ஏனைனில் அடிப்படை அம்சமாகிய மனத்தூய்மையை அவன் இழந்து விட்டான். அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்:
‘நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான் இதனைத்தவிர (மற்ற) எதனையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான். எவர் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றாரோ அவர் திட்டமாக மகத்தான பாவத்தை பொய்யாக கற்பனை செய்து விட்டார் ” (திருமறை குர்ஆன் 4:48)
7. ஷஹாதாக் கலிமாவின் மீது பற்றுதல் (நேசம்) வைத்தல்.
உயரந்த அல்லாஹ்விடம் பற்றுதல், அவனுடைய தூதரிடம் பற்றுதல் அவனுக்கு வணக்கம் புரியும் உண்மை அடியார்களிடம் பற்றுதல் வைத்தல். இக்கலிமாவின் மூலம் ஒருவன் அனைவரையும் விட அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் அன்பு வைப்பதில் முற்படுத்த வேண்டும். அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்
‘(நபியே மனிதர்களிடம்) நீர் கூறுவீராக: நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னை நீங்கள் பின் பற்றுங்கள். (அவ்வாறு நீங்கள் செய்தால்) உங்களை அல்லாஹ் நேசிப்பான். உங்கள் பாவங்களையும் உங்களுக்காக அவன் மன்னித்து விடுவான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவன். மிகக்கிருபையுடையவன்” (திருமறை குர்ஆன் 3:31)
முஹம்மது ரசூலுல்லாஹ்வின் பொருள்
‘ஷஹாதத்து அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்” என்பதன் பொருள் யாதெனில்: முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய உண்மைத் தூதராவார் என உள்ளத்தால் உறுதி கொண்டு நாவால் மொழிந்து சாட்சி கூறுவதும் ஆகும். அல்லாஹ்விpன் கட்டளைக்குப் பின் மனிதர்கள் அனைவரும் பின் பற்றுதற்குறியவர் அல்லாஹ்வின் கடைசித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களைத்தவிர வேறு யாருமில்லை என உறுதியாக சாட்சியம் கூற வேண்டும். எதைச் செய்யுமாறு அவர்கள் கட்டளையிட்டார்களோ அதைச் செய்வதில் அவர்களைப் பின்பற்ற வேண்டும். எதைத்தடுத்தார்களோ அதைச்செய்யாமல் முற்றிலும் தவிர்ந்து கொள்ள வேண்டும். அவர்கள் அறிவித்த அனைத்தும் சரியானது என அவர்களை உண்மைப் படுத்த வேண்டும். அவர்கள் எதை மார்க்கமாக எமக்கு காட்டி தந்தார்களோ, எவ்வாறு அல்லாஹ்வை வணங்க வேண்டுமென அறிவத்து தந்தார்களோ அவ்வாறே அதில் கூடுதல் குறைவின்றி நாம் அல்லாஹ்வை வணங்க வேண்டும். முஹம்மத் (ஸல்) அவர்களை எல்லா விஷயங்களிலும் நாம் முழுமையாக பின் பற்ற வேண்டும். நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘யார் (எனது வழிமுறைகளை பின் பற்றி) என் வழி நடக்கிககின்றார்களோ அவர் அல்லாஹ்வுக்கு வழிபட்டவர் ஆவார். யார் (எனது வழி முறைகளை பின் பற்றாமல்) எனக்கு மாறு செய்கின்றானோ அவன் அல்லாஹ்வுக்கு மாறு செயதவனாகின்றான் (ஆதாரம் புகாரி, முஸ்லிம்)
இஸ்லாத்தில் புதிதாக ஒன்றை நுழைக்க முடியாது. நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நமது இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும்” (ஆதாரம் புகாரி, முஸ்லிம்)
கடைசியாக நாம் இங்கே ஒரு முக்கிய விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் அதாவது நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைத்தன்மை உண்டு, அவர்கள் அனைத்திற்கும் சக்தி பெற்றவர்கள், அவர்களையும் நாம் வணங்கலாம் என்ற கொள்ளை இஸ்லாத்தில் கிடையாது. வணங்கப்பதுவதற்கு தகுதியான நாயன் அல்லாஹ் ஒருவன் மாத்திரமே. நாயகம் (ஸல்) அவர்களுக்கு எவ்வித சக்தியுமில்லை. அவர்களை யாரும் வணங்க முடியாது. அவர்களும் அல்லாஹ்வைத்தான் வணங்கினார்கள். அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும், அவனுடைய தூதரும் ஆவாரெனவும், அவர்கள் அல்லாஹ் நாடியதைத்தவிர தாமாகவே தனக்கோ, அல்லது வேறு யாருக்காவதோ எப்பிரயோஜனத்தையோ, எக் கெடுதலையும் செய்யவோ அவர்கள் சக்தி பெற மாட்டார்கள் எனவும் நாம் உறுதியாக விசுவாசம் கொள்ள வேண்டும்.
ரசூல் (ஸல்) மட்டுமல்ல வேறு எந்த நபிமார்களும், வலியுல்லாக்களும், அவ்லியாக்களும், அன்பியாக்களும் வணங்குவதற்கும், வேறு எதற்கும் தகுதி பெற மாட்டார்கள்.அவர்களும் நம்மைப் போல மனிதர்கள்தான். அவர்களுக்கு பாத்தியா, மொளலூது என்று ஓதி இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை கடைபிடித்து வரும் எல்லோரும் நிச்சயம் வழிகேட்டில் இருக்கிறார்கள். நிச்சயம் இறைவனால் மன்னிக்கப்படாத குற்றத்தை புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
No comments:
Post a Comment