குடும்ப உறவு என்பது இறைவனால் ஏற்படுத்தப்பட்ட புனிதமிக்க உறவாகும். அதில் சில சந்தர்ப்பங்களில் சலசலப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருந்தாலும், அதன் மூலம் இறைவன் உறவின் வலிமையை மேலும் பலப்படுத்தி விடுகின்றான். ஆனால் நம்மில் சிலர் குடும்ப உறவில் ஏற்படும் சின்னச் சின்ன பிரச்னைகளை பெரிதுபடுத்தி பல்லாண்டுகள் நீடித்து அப்புனித உறவை ஒரே நாளில் சிதைத்து விடுகின்றார்கள். அதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான்.
ஒரு ஆண் தனது ஆண்மையை இழந்து விட்டாலும் பெண் அவனுடன் சகிப்புத்தன்மையோடும், பொறுமையோடும் வாழ முடிவு செய்கிறாள். அதேசமயம் யார் மீது குறை என்பது நிரூபிக்கப்படாத நிலையில் இருந்தால் பெண்ணின் மீதே பழி சுமத்தி ஆண்கள் தம்மை குறையற்றவர்களாக காட்டிக் கொள்ள முனைகிறார்கள்.
மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது மனைவியரிடத்தில் எப்படி வாழ்ந்திருக்கிறார்கள் என்று ஆராயும் போது அவர்கள் சமுதாய அரங்கில் மிகப் பெரிய அந்தஸ்துள்ளவர்களாக இருந்த போதும் வீட்டுக்கு வந்து விட்டால் மிகச் சிறந்த கணவராக மாறி விடுவார்கள். சமையல் உட்பட அனைத்திலும் மனைவியர்களுக்கு உதவி புரிவார்கள்.ஆண்களைப் பார்த்து அல்லாஹ்வும் பின்வருமாறு கூறுகிறான் :
அப் பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள். நீங்கள் அவர்களை வெறுத்த போதிலும் (பொறுமையோடிருப்பீர்களாக. ஏனெனில்) ஒரு பொருளை நீங்கள் வெறுக்கக் கூடும். (ஆனால்) அல்லாஹ் அதில் அதிகமான நன்மைகளை வைத்திருப்பான் (அல்குர்ஆன் 4:19)
பெண் ஆணின் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறான். அதனால் தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் : பெண்களுக்கு நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்லிக் கொண்டே இருங்கள். ஏனெனில் அவர்கள் விலா எலும்பினால் படைக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரேசமயத்தில் அதை நேராக்க முயன்றால் உடைந்து விடும். அப்படியே விட்டு விட்டால் வளைந்த வடிவத்திலேயே இருக்கும். (நூல்: புகாரீ)
தன்னுடைய மனைவியிடத்தில் காணப்படும் வெறுப்புக்குரிய விஷயத்தை எவ்விதம் கையாள்வது என்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறும்போது,
ஒரு முஃமின் தன்னுடைய மனைவியிடத்தில் ஏதேனும் ஒரு குணம் பிடிக்கவில்லையென்றால் அவள் மீது கோபப்பட மாட்டான். மாறாக மற்றொரு புறத்தைக் கொண்டு திருப்தியடைந்து கொள்வான். (நூல்: முஸ்லிம்)
ஒரு ஆணுக்கு தன் மனைவியின் மீது குற்றம் கூற உரிமை இருப்பது போலவே பெண்ணுக்கும் இருக்கிறது. நபித்தோழியர்களான பெண்கள் அச்செயலையும் இஸ்லாமிய அடிப்படையில் எப்படி அணுகி இருக்கின்றார்கள் என்பதை பின்வரும் நபிமொழி தெளிவுபடுத்துகின்றது.
அபூஸயீத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
”நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருக்கும் போது ஒரு பெண்மணி வருகை தந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தன் கணவரைப் பற்றி மூன்று புகார் கூறினார்.
யாரசூலுல்லாஹ் என் கணவர் ஸஃப்வான் நான் தொழுதால் அடிக்கிறார். நோன்பு வைத்தால் விட்டு விடச் சொல்கிறார். சூரியன் உதயமாகும் பஜ்ர் தொழுவதில்லை. இந்த புகாரைக் கூறும் போது ஸஃப்வானும் அந்த சபையில் இருந்தார். ‘என்ன ஸஃப்வானே! உன் மனைவி கூறுவது உண்மைதானா?’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட போது அவர் ஆம் எனக் கூறிவிட்டு, அதற்குரிய காரணத்தைச் சொல்லத் தொடங்கினார்.
முதல் புகாருக்குரிய காரணம், அப்பெண்மணி இரவு நேரங்களில் தொழ ஆரம்பித்தால் முதல் இரண்டு ரக்அத்திலோ அல்லது முதல் ரக்அத்திலோ பெரிய இரண்டு சூhவை ஓதுகிறார். (தொழுது முடித்து விட்டு படுக்கைக்கு வருவதற்கு மிகத் தாமதமாகிறது என்ற போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவு நேரங்களில் ஒரு அத்தியாயத்தையோ அல்லது இரண்டு சிறிய அத்தியாயங்களையோ ஓதுமாறு அப்பெண்மணிக்கு கட்டளையிட்டார்கள்.
இரண்டாவது புகாருக்கு அப்பெண்மணி தொடர்ந்து நோன்பு வைக்கிறார். நானோ வாலிபனாக இருக்கிறேன். எனக்கு பொறுமை இழந்து விடுகிறது என்று அவர் கூறிய போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், கணவன் அனுமதியின்றி நஃபிலான நோன்புகளை மனைவி நோற்கக் கூடாது என்று கட்டளையிட்டார்கள்.
மூன்றாவது புகாருக்குரிய காரணமான ஸஃப்வான் பின்வருமாறு கூறினார். நான் பெரிய குடும்பத்துக்காரன் என்பதை நீங்களே அறிவீர்கள். இரவில் அதிகநேரம் விவசாயத்திற்கு நீர் பாய்ச்சுவதால் அதிகாலை எழுந்து நிற்க முடிவதில்லை என்ற போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஃப்வானே! எப்பொழுது விழிக்கிறாயோ (உடன்) தொழுது கொள் என்றார்கள்.” (நூல்: இப்னுமாஜா) அதேசமயம் அதையே வழக்கமாக்கிக் கொள்ளக் கூடாது என்று வேறு பல நபிமொழிகள் தெளிவுபடுத்துகின்றன.
மனைவிக்குரிய கடமைகள் :
ஹக்கீம் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தம் தந்தையின் வாயிலாக அறிவிக்கிறார்கள். ”யாரசூலுல்லாஹ்! எங்களது மனைவியர்களுக்கு நாங்கள் செய்ய வேண்டிய கடமை என்ன?” என்று கேட்டேன். (அப்போது) ஐந்து விஷயத்தைப் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
1) நீ சாப்பிடுவதை அவளுக்கும் சாப்பிடக் கொடு.
2) நீ உடுத்துவதைப் போன்று அவளுக்கும் உடுத்தக் கொடு.
3) அவள் முகத்தில் அடிக்காதே.
4) அருவெறுப்பான் வார்த்தைகளை உபயோகப்படுத்தாதே.
5) வீட்டிலேயே தவிர வேறெங்கும் அவளைத் தனிமைப்படுத்தாதே. (நூல்: இப்னுமாஜா)
மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : உங்களில் யாரும் தன் மனைவியை அடிமையை அடிப்பதைப் போன்று (கசையால்) அடித்து விட வேண்டாம். ஏனெனில் பகலின் இறுதியில் அவளோடு அவர் சேர்ந்து விடுவார். (நூல்: புகாரீ)
அவ்வாறே தன் மனைவியின் தேவையையும், ஆசையையும், அவளது கண்களைப் பார்த்தே நிறைவேற்றுபவனே சிறந்த குடும்பத் தலைவனாக கருதப்படுகிறான்.
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு பயணத்தில் இருந்தேன். அப்போது எனக்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் ஓட்டப் பந்தயம் நடந்தது. அதில் நான் வெற்றி பெற்று விட்டேன். (சில காலம் கழிந்து) நான் சதைப் பிடிப்பாக இருந்த போது மறுபடியும் போட்டி நடந்தது. அதில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெற்றி பெற்றார்கள். போட்டிக்குப் பின்பு இந்த வெற்றி முந்தைய வெற்றிக்குச் சமமாகி விட்டது என்றார்கள். (நூல்: அபூதாவூது)
மேலும் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறினார்கள் : நான் என் தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வீட்டிற்குள் நுழைந்தவுடன் அனைவரும் ஓடி விட்டார்கள். அதைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனைவரையும் திரும்ப அழைத்து வந்து என்னுடன் விளையாடச் சொன்னார்கள். (நூல்: புகாரீ)
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் விளையாட்டின் மீது கொண்டிருந்த ஆர்வமிகுதியால் பள்ளி வளாகத்தில் அபஸ்ஸாவின் வீரர்கள் செய்த போர்ப் பயிற்சியை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அனுமதியோடு ஜன்னல் வழியாகப் பார்த்தார்கள். (நூல்: புகாரீ)
ஹுனைன் அல்லது தபூக் போருக்குப் போய் வரும் போது ஓரிடத்தில் தங்க நேரிட்டது. அச்சமயம் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இறக்கை முளைத்த குதிரை வைத்து விளையாடினார்கள். (அபூதாவூத்) இவ்விதமாக மனைவியர்களின் மனநிலைக்கும் வயதிற்கும் ஏற்ற சிறந்த கணவராக தம்மை உருவகித்தது போல வேறு எந்த உலகத் தலைவரும் வாழ்ந்ததாக வரலாறில்லை. அத்தகுதியால் தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் பின்வரும் பிரகடனத்தை அறிவிக்கின்றார்கள்.
உங்கள் குடும்பத்திற்கு யார் சிறந்தவரோ அவர் தான் உங்களில் சிறந்தவர். நான் என் குடும்பத்திற்கு சிறந்தவராக இருக்கிறேன். (நூல்: இப்னுமாஜா)
கணவன் மனைவி இருவருக்குமிடையில் மனம் விட்டுப் பேசாமல் இறுக்கமாக இருப்பதனால் தான் சிறிய பிரச்னைகள் பூதகரமாகி விடுகிறது.
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்னிடத்தில் கூறினார்கள் : நீ என் மீது கோபமாக இருக்கிறாயா? அல்லது சாந்தமாக இருக்கிறாயா? என்று எனக்குத் தெரியும். அப்போது நான், அதை எப்படி தெரிந்து கொள்வீர்கள்? என்று நான் கேட்ட போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : நீ என்மீது சாந்தமாக இருந்தால், முஹம்மதுடைய இறைவன் மீது சத்தியமாக என்று (பேச்சுவார்த்தையில்) கூறுவாய். என்மீது கோபமாக இருந்தால் இப்ராஹீமுடைய இறைவன் மீது சத்தியமாக என்று கூறுவாய். அப்போது நான் கூறினேன், ஆம் யாரசூலுல்லாஹ். அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை பெயரைத் தவிர வெறொன்றையும் (கோபத்தின் போதும்) நான் துறக்கவில்லை. (நூல்: புகாரீ)
கணவனுக்குரிய கடமை :
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : பெண்களில் சிறந்தவர் யார்? என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கப்பட்டது. அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அவளைப் பார்த்தால் கணவன் சந்தோஷமடைய வேண்டும். ஏதாவது வேலை செய்யச் சொன்னால் உடனே நிறைவேற்றுவாள். தன் உடலால் மோசடி செய்ய மாட்டாள். கணவன் வெறுக்கும் விதமாக பொருட்களை வீண் விரையம் செய்ய மாட்டாள். (நூல்: நஸஈ)
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்சாரித் தோழர்களுடனும், முஹாஜிர்களுடனும் அமர்ந்திருந்தார்கள். அப்போது ஒரு கோவேறுக் கழுதை வந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஸஜ்தா செய்தது. அப்போது தோழர்கள் கேட்டார்கள், யாரசூல்லாஹ், மிருகங்கள், மரங்கள் கூட உங்களுக்கு ஸஜ்தா செய்கிறது. அவற்றை விட நாங்கள் தானே உங்களுக்கு ஸஜ்தா செய்யத் தகுதி உடையவர்கள் என்ற போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்வையே வணங்குங்கள். உங்கள் தோழரான என்னைக் கண்ணியப்படுத்துங்கள். உலகில் மனிதருள் யாருக்காவது ஸஜ்தா செய்ய நான் அனுமதிப்பதாக இருந்தால் மனைவியை கணவனுக்கு ஸஜ்தா செய்யுமாறு ஏவியிருப்பேன் என்றார். (நூல்: அஹ்மது)
சிரம் தாழ்த்துவது என்பது தான் பணிவின் உச்சகட்ட செயலாகும். அதையே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனைவியை கணவனுக்கு செய்ய ஏவியிருப்பேன் என்று கூறியிருப்பதன் மூலம் அதிகபட்சமான பணிவு காட்டுமாறு மனைவியருக்கு கட்டளையிடுகிறார்கள். அதற்காக மனைவியர்களை அடிமைப்படுத்துவது என்பது அர்த்தமாகாது. மனைவியை கணவன் மதிப்பதும், கணவனுக்கு மனைவி பணிவதும் தான் குடும்ப உறவின் மகத்தான புனிதமாகும். அதற்கொப்ப நம் குடும்ப வாழ்க்கை அமைய எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்புரிவானாக..!
No comments:
Post a Comment