அல்லாஹ்-சுப்ஹானல்லாஹ்முஸ்லிமான மற்றும் முஸ்லிமல்லாத (மாற்றுமத) அன்புச் சகோதர, சகோதரிகளே தங்கள் அனைவருக்கும் ”அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் மத்துல்லாஹி வபரக்காத்தஹு (தங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக!) இறை விசுவாசிகளே! நாம் சம்பாதிக்கவேண்டும், உயர்ந்த மாளிகைகளைப் போன்ற வீடுகளை கட்ட வேண்டும் அதில் அழகிய துணைகளுடனும் வாரிசுகளுடனும் குடிபுக வேண்டும் என்று சிந்திப்போம் அதற்கான திட்டங்கள் தீட்டி அதை நடைமுறைப் படுத்துவோம் அதில் சிலருக்கு அல்லாஹ் வெற்றி அளிப்பான் மற்றும் சிலருக்கு தோல்வியளிப்பான். தங்கள் எண்ணங்களில் வெற்றிபெற்றவர்கள் அல்லாஹ்வின் கிருபை கிடைத்து விட்டதாக எண்ணி ஆனந்தமாக இருப்பார்கள் மற்றும் சிலரோ தன் எண்ணங்களில் தோல்வியடைந்தவர்களாக விரக்தியடைந்தும் அல்லாஹ்வின் கிருபை கிடைக்கவில்லை என்று எண்ணி சலிப்படைந்து வாழ்ந்து வருவார்கள். சகோதரர்களே! சிந்தித்துப்பாருங்கள் நாம் எங்கே இருக்கின்றோம்! பணம், பொருள், மனைவி மக்கள், வசதிவாய்ப்புகள் இவைகள்தான் நமக்கு அல்லாஹ்விடம் கிடைத்த அருட்கொடைகளா? அல்லாஹ் நமக்கு ஏதோ ஒன்றை அருளிவிட்டால் உடனே ”அர்ரஹ்மான்! அர்ரஹ்மான்” என்று கூறுகிறோம்! ஆனால் நாம் நினைத்தது நடக்காமல் போகும்பட்சத்தில் சோகமே உருவானதாக எண்ணிக் கொண்டு அல்லாஹ்வைத் தவிர வேறு ஏதாவது ஒரு சக்தி கைகொடுக்குமா? என்று ஏங்கி அதைத் தேடும் பாதைகளில் அமர்ந்துவிடுகிறோம்! ஏன் நீங்கள் நினைத்ததை அல்லாஹ் நிச்சயம் நடத்தவேண்டும் என்று நினைக்கிறீர்களா? இப்படி நீங்கள் நினைத்து விடாதீர்கள் காரணம் நீங்கள் இப்படி நினைத்துவிட்டால் இது பாவங் களிலேயே மிகப்பெரிய பாவமாக மாறிவிடும் மேலும் ”அல்லாஹ்வுக்கு நாம் அடிமை” என்ற கொள்கை தலைகீழாக மாறிவிடும்! (அல்லாஹ் என்னை மன்னிக்க வேண்டும்). சகோதரர்களே இந்த உலக வாழ்கை பற்றி அல்லாஹ் கூறும் போது. “இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றக் கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர வேறில்லை” (ஆலஇம்ரான்:185) மேலும் இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும் வீணுமேயன்றி (வேறு) இல்லை. இன்னும் பயபக்தியுடையோருக்கு நிச்சயமாக மறுமையின் வீடு மேலானதாகும்” (அல்அன்ஆம்: 32) அல்லாஹ் நம்மை துரத்தி துரத்தி உதவிக் கொண்டிருக்கிறான் நாம் அதை சிந்திப்பதில்லையே! சகோதரர்களே நீங்கள் இந்தக் கட்டுரையை படித்துக் கொண்டிருக்கின்றீர்கள் சற்று தங்களைப்பற்றி கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள்! சென்ற வினாடி நாம் எங்கே இருந்தோம் சென்ற வாரம் நாம் எங்கே இருந்தோம் சென்ற மாதம் நாம் எங்கே இருந்தோம் சென்ற வருடம் நாம் எங்கே இருந்தோம் பிறப்பதற்கு முன் நாம் எங்கே இருந்தோம் (குழப்பமாக இருக்கிறதா? இதுதான் வாழ்க்கை!) நம்மை பாலூட்டி, அறிவுட்டி வளர்த்த அருமைத் தாய் கர்ப்பம் தறிக்கும் முன் நாம் அற்பத்திலும் அற்பமான ஒரு கொசுவின் சடலமாக கூட இருக்கவில்லையே! அதைவிட கொடுமை ஒரு சூனியமாக (புஜ்ஜியமாக) கூட இருக்கவில்லையே! இப்படிப்பட்ட நிலையில் அல்லாஹ் நாம் பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு நம் தாயின் வயிற்றில் ஒரு அற்பமான நீர்த்துளியால் (இந்திரியத்துளியாக) நம்மை செலுத்தி அந்த நீர்த்துளிக்குள் நம் உயிரை ஊதினானே! அவன் ரஹ்மானில்லையா? தாயின் வயிற்றில் நம்மை ஒப்படைத்து உதவினானே! உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உண்டாக்கிப் பின் (உங்கள் தந்தையிடம்) தங்க வைத்து. (பின்னர் கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் அவனே, சிந்தித்து விளங்கிக் கொள்ள கூடிய மக்களுக்கு நிச்சயமாக நம் வசனங்கள் விவரித்துள்ளோம் (திருக்குர்ஆன் 6:98) நம் உயிருக்கு உடல் கொடுத்து உதவினானே! அவன்தான் கர்ப்ப கோளறைகளில் தான் நாடியபடி உங்களை உருவாக்கின்றான். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை, அவன் யாரையும் மிகைத்தோனாகவும், விவேகம் மிக்கோனாகவும் இருக்கின்றான் (திருக்குர்ஆன் 3:6) தாயின் கர்ப்பப் பையில் நம் உயிரை கண்காணித்து உதவினானே! ஒவ்வொரு பெண்ணும் (கர்ப்பத்தில்) சுமந்து கொண்டிருப்பதையும்,கர்ப்பப் பைகள் சுருங்கி குறைவதையும், அவை விரிந்து அதிகரிப்பதையும் அல்லாஹ் நன்கறிவான். ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் அளவு இருக்கின்றது (திருக்குர்ஆன் 13:8) வளரும் பருவத்தில் நமக்கு கல்வி அறிவைக் கொடுத்தானே! ”(நபியே!) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! அவனே மனிதனை இரத்தக் கட்டியிலிருந்து படைத்தான். நீர் ஓதும்,உமது இறைவன் மாபெரும் கொடையாளி, அவன்தான் எழுதுகோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். மனிதன் அறியாத வற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.” (திருக்குர்ஆன் 96:5) நமக்கு வாழ வழிவகை செய்து ஆற்றலை கொடுத்தானே! நீங்கள் கடலிலிருந்து நய(மும், சுவையு)முள்ள மீன் போன்ற மாமிசத்தை புசிப்பதற்காகவும், நீங்கள் அணிந்து கொள்ளக்கூடிய ஆபரணத்தை அதிலிருந்து நீங்கள் வெளிப்படுத்தவும் அவன் தான் அதனையும் (கடலையும்) வசப்படுத்தித் தந்தான்; இன்னும் அதில் தண்ணீரைப் பிளந்து கொண்டு செல்லும் கப்பலை நீங்கள் காணுகிறீர்கள்; (பல்வேறு இடங்களுக்குச் சென்று) அவன் அருட்கொடையை நீங்கள் தேடவும், நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டும் (அதை) இவ்வாறு வசப்படுத்திக் கொடுத்தான். (திருக்குர்ஆன் 16:14) நமக்கு ஆற்றல் மட்டும் போதுமா என்று எண்ணி நம் ஆற்றலுக்கு உதவியும் செய்தானே! அவன்தான் வானத்திலிருந்து மழையை அளவோடு இறக்கி வைக்கிறான். பின்னர், அதனைக் கொண்டு இறந்து கிடந்த பூமியை நாம் தாம் உயிர்ப்பிக்கின்றோம். இவ்வாறே நீங்களும் (மரணத்திற்கு பின் உயிர்ப்படுத்தப் பெற்று) வெளிப் படுத்தப்படுவீர்கள். (திருக்குர்ஆன்43:11) மனிதர்களுக்கு குறைகளும் கொடுத்தான் அந்த குறைகளால் நிறைகளும் கொடுத்தானே! சகோதரர்களே, அல்லாஹ் சிலர் சிலருக்கு உடலளவில் குறைபாடுகள் கொடுத்தான் ஆனால் நாமோ இந்த குறைபாடுகளை கண்டு ஏன் இவர்களை இவ்வாறு இறைவன் படைத்தான் என்று எண்ணிக் கொண்டிருப்போம்! ஆனால் அல்லாஹ்வோ யாருக்கு குறைகள் கொடுத்தானோ அவர்களுக்கு நிறைகளையும் கொடுத்து உதவுகிறானே! சிந்தித்துப்பாருங்கள்! கண்பார்வை இல்லாதவர்கள் எதனையும் காண முடியாது இது அவர்களுக்கு உள்ள குறை அதே வேளையில் காதுகளில் நுண்ணறிவோடு கேட்கும் சக்தி அதிகமாக்கித்தந்தானே! இதைவிட சிறந்த உதவியாக கண்பார்வையற்றவர்கள் கண்களின் விபச்சாரத்திலிருந்து பாதுகாப்பு பெறுகிறார்களே! மஹ்ஷரில் அவர்களுக்கு எதிராக அவர்களது கண்களுக்கு விசாரணை இருக்காதே! இது உதவியல்லவா? காது கேளாதோருக்கு கேட்கும் திறன் குறைவாக இருக்கும் இவ்வாறு உள்ளவர்களுக்கு நினைவாற்றல் அதிகமாக இருக்குமே! அதே வேளையில் காது கேளாதவர்கள் தீய வார்த்தைகளை கேட்காமல் தீய பாடல்களை கேட்காமல் இருப்பதானல் மஹ்ஷரில் அவர்களுக்கு எதிராக அவர்களது செவிக்கு விசாரணை இருக்காதே! இது உதவியல்லவா? வாய்பேச முடியாத ஊமைகள் இருக்கிறார்கள் அவர்கள் தங்கள் வாய்களினால் எதனையும் பேச முடியாது ஆனால் அதே நேரம் அவர்கள் புறம் பேசுதல் போன்ற எந்த கெட்ட வார்த்தைகளையும் பேச முடியாதே அவர்களுக்கு மஹ்ஷரில் அவர்களின் வாய்க்கு விசாரணை இருக்காதே! இது உதவியல்லவா? சகோதரர்களே! பிறக்கும் குழந்தைகளிலோ அல்லது ஏதாவது விபத்திலோ சிலருக்கு புத்தி சுவாதீனம் இல்லாமல் பைத்தியமாக இருப்பார்கள் அவர்கள் நிலையைக் கண்டால் நம்மில் சிலருக்கு பைத்தியம் என்று எண்ணி மனதளவில் சிரிப்பு வரும் ஆனால் இவர்களுக்கு உள்ள அருட்கொடைகளை எண்ணிப்பார்த்தால் நமக்கு வருத்தமளிக்கும் காரணம் இவர்கள் பிறவியிலேயே புத்திசுவாதீனமற்றவர்களாக இருந்தால் கேள்விக்கணக்கே இருக்காதே! மேலும் இடையில் ஏதாவது விபத்துக்களால் புத்திசுவாதீனம் ஏற்பட்டால் அன்று முதல் அவர்கள் தன்னை அறியாமல் செய்யும் பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக்குமே! மேலும் மஹ்ஷரில் இப்படிப்பட்டவர்களின் உள்ளத்திற்கு விசாரணை இருக்காதே! இது உதவியல்லவா! இதையே திருமறை இவ்வாறு கூறுகிறது நாம் தான் சிந்திக்க தவறுகிறோம் ‘நிச்சயமாக செவி, பார்வை, உள்ளம் ஆகிய அனைத்தும் (மறுமை நாளில்) விசாரிக்கப்படும்.. (திருக்குர்ஆன் 17:36) சகோதரர்களே! இதை செவி தாழ்த்திக் கேளுங்கள்! சகோதரர்களே நம்மில் சிலர் நம்மை வீடு தேடி வந்து உலகில் உயர்ந்த பொருள் (அல்லாஹ்வின் பார்வையில் அர்ப்பமான பொருள்) கொடுத்து உதவுவார்கள் அதற்கு பிரதிபலனாக உங்களிடம் உள்ள பொருள், பொன், ஆன்மக்கள், பெண் மக்கள், நற்பெயர் போன்ற எதையாவது எதிர்பார்ப்பார்கள் ஆனால் அல்லாஹ் உங்களுக்கு கிடைத்தற்கரிய உயிரை கொடுத்தான், உங்களுக்கு நிலத்திலும் உதவுகிறான்! நிலவிலும் உதவுகிறான்! காற்றில் பயணிக்கும் போதும் உதவுகிறான்! கடலில் பயணிக்கும் போதும் உதவுகிறான்! ஏன் உங்களால் முடிந்தால் நீங்கள் பாம்பு பொந்துக்குள் ஓடி ஒழிந்துக்கொண்டாலும் அங்கும் சுவாசக் காற்றை கொடுத்து உதவுவானே! நீங்கள் நிலத்தில் சுரங்கம் தோண்டி தங்கத்தை வெட்டி எடுக்க முனைந்தாலும் அங்கும் காற்றை, நீர் மற்றும் உணவை கொடுத்து உதவுகிறானே! ஏன் நீங்கள் மரணித்தால் நல்லவராக இருந்தால் கப்ருக்கடியில் சுவனத்தின் கதவை திறந்துவிட்டு என் அடியான் உறங்கட்டும் என்று ஆசைப்படுகிறானே!!! அல்லாஹ் ரஹ்மானில்லையா? ரஹ்மத்துல் ஆலமீன் இல்லையா? ஆனால் மனிதர்களாகிய நாம் அல்லாஹ்வின் உதவி கிடைக்காவிட்டால் உடனே விக்ரஹத்தையும் சமாதிகளையும் வணங்குகிறோம் அவைகள் உதவும் என்று எண்ணிக் கொள்கிறோம் இது அல்லாஹ்வுக்கு நாம் செய்யும் துரோகமில்லையா? இது படைத்த ரப்புல் ஆலமீனுக்கு எதிராக நாம் செய்யும் பாவமில்லையா? இது முறையா? சிந்தியுங்கள் சகோதரர்களே! உங்களுக்கு அளித்த அருட் கொடைகளுக்கு பகரமாக அல்லாஹ் உங்களிடம் என்ன கேட்கிறான்! வாடகையா? கூலியா? உணவா? உடையா? கட்டணமா? ஒன்றுமில்லையே! மாறாக கீழே உள்ள ஒன்றைத்தானே அவன் கேட்கிறான்! உங்கள் இறைவன் கூறுகிறான்; ”என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக் கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமை யடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந் தவர்களாக நரகத்தில் நுழைவார்கள். ”( திருக்குர்ஆன் 40:60) (கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச்சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா? (திருக்குர்ஆன் 75:37) நீங்கள் இளைப்பாறுவதற்காக இரவையும், நீங்கள் பார்ப்பதற்காக பகலையும் அல்லாஹ்தான் படைத்தான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது அருள் பொழிகின்றான்; ஆயினும் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை. (திருக்குர்ஆன் 40:61.) அல்லாஹ்தான் உங்களுக்கு இப்பூமியைத் தங்குமிடமாகவும், வானத்தை ஒரு விதானமாகவும் உண்டாக்கியிருக்கிறான்; மேலும்,அவன் தான் உங்களை உருவாக்கி, உங்கள் உருவங்களை அழகாக்கி, சிறந்த ஆகார வசதிகளையும் அளித்தான்; அவன்தான் அல்லாஹ்;உங்களுடைய இறைவன்; அகிலதாருக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் மிக பாக்கியடையவன். (திருக்குர்ஆன் 40:64) அவனே (என்றென்றும்) உயிரோடிருப்பவன்; அவனையன்றி (வேறு) நாயனில்லை – ஆகவே நீங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபட்டு தூய உள்ளத்தோடு அவனை அழையுங்கள்; அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் – அனைத்துப் புகழும் அகிலங்கள்எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும் நாயனான அல்லாஹ்வுக்கே ஆகும். (திருக்குர்ஆன் 40:65) (நபியே!) கூறுவீராக ”என்னுடைய இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகள் எனக்கு வந்த பொழுது, அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைப்பவற்றை வணங்குவதை விட்டும் நிச்சயமாக நான் தடுக்கப்பட்டுள்ளேன் – அன்றியும் – அகிலத்தின் இறைவனுக்கே அடிபணிய வேண்டும் என்று கட்டளையிடப்பட்டிருக்கின்றேன்.” (திருக்குர்ஆன் 40:66) சகோதர, சகோதரரிகளே நாம் உங்களிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான்! அல்லாஹ்வின் அருட்கொடைகளையும் கைமாறு செய்யப்பட முடியாத உதவிகளையும் கொடுத்த அல்லாஹ்விற்கு அடிமையாக இருக்க விரும்புவீர்களா? அல்லது பேசினால் பதிலளிக்காது!. கேட்டால் கொடுக்காத! ஏன் உங்களை திரும்பிக்கூட பார்க்காத ஏதாவது ஒன்றிற்கு அடிமையாக இருக்க விரும்புவீர்களா? உங்களுக்கு சிறு உதவி இதோ! அல்லாஹ்வின் அருட்கொடைகளை படித்தீர்கள் அந்த அல்லாஹ்விடம் எனக்கு எது உண்மை எது பொய் என்று புறியவில்லை என் மூதாதையர்களின் வழியில் நான் இருக்கின்றேன் எனக்கு விக்ரஹ மற்றும் தர்கா வழிபாடுகளை விட்டுவிடு என்று கூறுவது புதிதாக உள்ளது மேலும் கஷ்டமாக உள்ளது எனவே எனக்கு எது உண்மை எது போலி என்று இணம் காட்டி நேர்வழி காட்டுவாயா? நான் பின்பற்றுகிறேன் என்று கண்ணீர்மழ்க கேட்டுப்பாருங்கள்! விந்துத்துளியாக இருந்த உங்களுக்கு உயிரை ஊதிய உங்கள் அல்லாஹ் (இன்ஷா அல்லாஹ்) உங்களுக்கு நேர்வழி காட்டி சுவனத்தைகூட அளிப்பான்! நீங்கள் வணங்கும் விக்ரஹ்மோ அல்லது கப்ரோ உங்களுக்கு சுவனத்தை அளிக்குமா? யார் யாருக்கோ சிந்திப்பீர்கள் சற்று உங்களுக்காக! சிந்தித்துப்பாருங்கள் நேர்வழி கிடைக்கும் (இன்ஷா அல்லாஹ்) உங்கள் முடிவு உங்கள் கையில்! ஸலாம் இறுதியாக அல்லாஹ்வின் வார்த்தை ஒன்றைச் சொல்லிக் கொண்டு இந்த மடலை முடித்துக்கொள்கிறேன்! என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் ”நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள்” (என்பதைக் கூறுவீராக!) (திருக்குர்ஆன் 2:186) அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப்புகழும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கே) |
Collections in this blog is not my own creation. Its all collected from other sources. I request the peoples who visiting this blog please pray for the peoples who created this all collections. Thank you
Search This Blog
Thursday, 12 January 2012
மனிதன் இறைவனை சிந்திக்க வேண்டும்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment